வெறி நாய்களை பிடிக்க நடவடிக்கை தீவிரம்
விழுப்புரம்: விழுப்புரத்தில் வெறிநாய்களை பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மகாராஜபுரம், ஹவுசிங் போர்டு குடியிருப்பு பகுதியில் நேற்று சுற்றி திரிந்த வெறிநாய் ஒன்று, அந்த பகுதி சாலையில் நடந்து சென்ற பலரை கடித்தது. இதில், மொத்தம் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நகராட்சி சார்பில், அந்த வெறிநாயை பிடிக்க இரண்டு குழு அமைக்கப்பட்டு, தேடுதல் பணி நடந்து வருகிறது. இந்த சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதால், நகரின் 42 வார்டுகளிலும் திரியும் தெரு நாய்களை பிடித்து, கட்டுப்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக, நேற்று காலை மகாராஜபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேரில் சென்று லட்சுமணன் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை மற்றும் சுகாதார முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து, மருத்துவ குழுவினரிடம் விசாரித்தார். தொடர்ந்து அவர், விழுப்புரம் நகராட்சி சேர்மன் தமிழ்செல்வி, ஆணையர் வசந்தி, நகர்நல அலுவலர் ஸ்ரீபிரியா, சுகாதார நிலைய மருத்துவர் ஜோதி உள்ளிட்ட குழுவினரிடம், பொதுமக்களை அச்சுறுத்திய வெறிநாயை உடனே பிடிக்க வேண்டும்; பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி தடுப்பூசி செலுத்தவும், தொடர்ந்து, 7 டோஸ் மருந்து கொடுப்பதையும், சுகாதார குழுவினர் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நகரின் பிற பகுதிகளில் தெருநாய்கள் சுற்றுவதை கட்டுப்படுத்தவும், நோய் தடுப்பு பணியை மேற்கொள்ளவும், நகராட்சி மற்றும் சுகாதாரத்துறை நிர்வாகத்தினர் துரித நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத் தினார்.