ஆடு, மாடு கொட்டகை அமைக்க அலைக்கழிப்பு; விவசாயிகள் சங்கத்தினர் புகார்
விழுப்புரம்; விழுப்புரத்தில் ஆடு, மாடு கொட்டகைக்கு விண்ணப்பித்த விவசாயிகளை நீண்ட காலம் அலைகழித்து வருவதாக, விவசாயிகள் சங்கத்தினர் புகார் அளித்தனர். விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்த, தமிழக விவசாயிகள் வாழ்வாதார முன்னேற்ற சங்கத்தினர் அளித்த மனு:விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் 32 பேர் கடந்த 2023ம் ஆண்டு ஆடு, மாடுகள் வளர்க்கும் கொட்டகை கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம், தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பிரிவிற்கு இந்த மனுகள் அனுப்பி வைக்கப்பட்டது.அங்கு சென்று விசாரித்தபோது, விண்ணப்பங்கள் இல்லை எனவும், விண்ணப்பங்கள் காணாமல் போய்விட்டதாகவும், மீண்டும் விண்ணப்பிக்குமாறு அலட்சியத்துடன், தெரிவித்தனர். மறுபடியும் விண்ணப்பித்தபோது அதனை மயிலம், ஒலக்கூர் ஒன்றியத்திற்கு அனுப்பி வைத்தனர். மயிலம் ஒன்றிய அலுவலகத்தில் நீண்ட நாள் விண்ணப்பங்களை ஆய்வு செய்து, தகுதி சான்றுடன், மீண்டும் விழுப்புரம் ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். விவசாயிகள் இரண்டு மாதம் கழித்து சென்றபோது, அந்த விண்ணப்பங்கள் வரவில்லை, தேடி பார்க்கிறோம் என்று கூறி, இழுத்தடிப்பு செய்கின்றனர்.விவசாயிகள் ஆடு, மாடு வளர்க்கவும், அதற்கு அரசு வழங்கும் கொட்டகை அமைப்பதற்கு மானிய நிதி கேட்டு விண்ணப்பித்தால், அதிகாரிகள் அலட்சியத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.இது தொடர்பாக கலெக்டர் விசாரித்து, விவசாயிகளின் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து ஆடு, மாடு கொட்டகை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.