மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம் கோரி விவசாயிகள் மனு
விழுப்புரம் : மழையால் பாதித்த வேளாண், தோட்டக்கலை பயிர்களுக்கு அரசு நிவாரணம் வழங்கக்கோரி விவசாயிகள் சங்க நிர்வாகிகள், விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் சகாபுதீன், செயலாளர் கலியமூர்த்தி தலைமையில் அளித்த மனு:விழுப்புரம் மாவட்டத்தில், பெஞ்சல் புயல் மற்றும் கன மழையால் விளை நிலங்களில் புகுந்த நீர் கடந்த 2 வாரங்களாக வடியாமல் உள்ளது. மேலும், பல ஏரிகள் உடைப்பு ஏற்பட்டுள்ளது. போர்க்கால அடிப்படையில் உடைப்பு ஏற்பட்டுள்ள ஏரிகளை கான்கிரீட் சுவர் அமைத்து கரை அமைக்க வேண்டும்.வேளாண் பயிர்கள் நெல், உளுந்து, காராமணி, சவுக்கு, கரும்பு, மரவள்ளி, தோட்டக்கால் பயிர்கள் வெண்டை, கத்தரி, மிளகாய், தர்பூசணி, கீரை வகைகள், வாழை, புடலை முழுவதுமாக தண்ணீர் சூழ்ந்து பாதித்துள்ளது.பாதித்த விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு, வேளாண் பயிர்களுக்கு 40 ஆயிரம், தோட்டக்கலை பயிருக்கு 50 ஆயிரம், ஆடு ஒன்றுக்கு 10 ஆயிரம், மாடு ஒன்றுக்கு 50 ஆயிரம், கோழி ஒன்றுக்கு 200 ரூபாய் வீதம் போர் கால அடிப்படையில் வெள்ள நிவாரணமாக அரசு வழங்க வேண்டும்.மேல்மலையனுார் தாலுகாவில் புயலால் வேளாண், தோட்டக்கால் பயிர்கள் முழுதும் பாதித்துள்ளது. பாதித்த இந்த தாலுகாவிற்கும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும். தொடர்ந்து, இரு வாரங்களாக மழையால் விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அரசு ரேஷன் கார்டுதாரர்களுக்கு 2000 ரூபாய் வழங்கியதை, 5000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.