அரசு பொறியியல் கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்கம்
விழுப்புரம்: விழுப்புரம் அண்ணா பல்கலை., அரசு பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா நடந்தது. கல்லூரி கலையரங்கில் நடந்த விழாவில், பேராசிரியர் செல்வராஜ் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் செந்தில் தலைமை வகித்து துவக்க உரையாற்றினார். துறைத்தலைவர்கள் வேல்முருகன், ரீகன், கவிதா, பேராசிரியர் சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழுப்புரம் மாவட்ட கூடுதல் கலெக்டர் பத்மஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விழாவில் அவர் பேசியதாவது: உங்கள் எதிர்கால வாழ்விற்கான நல்வழியை நீங்களாகவே தேர்வு செய்து சாதிக்க வேண்டும். எதிர்கால இலக்கினை நிர்ணயித்துக்கொண்டு, தொடர்ந்து நன்கு படிக்க வேண்டும். ஏதேனும் ஓர் இடத்தில் தடங்கல் ஏற்பட்டாலும் அங்கேயே நின்று விடாமல் தொடந்து முயற்சி செய்து அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும். வகுப்பறை மட்டுமின்றி, நுாலகங்களுக்கும் சென்று பயனுள்ள புத்தகங்களை படித்து உயர்வுபெற வேண்டும். அண்ணா பல்கலை., கல்லுாரியில் அனைத்து வசதி வாய்ப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தமிழக அரசின் திறன் மேம்பாட்டு கல்வி மற்றும் நான் முதல்வன் திட்ட வழிகாட்டுதல்களை பயன்படுத்தி பொறியாளராக சாதிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.