ரூ.3 கோடியில் கட்டிய மீன் மார்க்கெட் கடைகள் வீணாகும்... அவலம்; மின் இணைப்பு, அடிப்படை வசதி இல்லை என வேதனை
விழுப்புரம்: விழுப்புரத்தில் ரூ.3.10 கோடி மதிப்பில் கட்டி திறக்கப்பட்ட நவீன மீன் மார்க்கெட் வளாகம், முழுவதும் பயன்பாட்டிற்கு வராமலும், வீணாகி வருவதாக மீன் வியாபாரிகளும், பொது மக்களும் வேதனை தெரிவிக்கின்றனர்.விழுப்புரம் எம்.ஜி.,ரோடு பகுதியில், நெரிசல் மிகுந்த இடத்தில் மீன் மார்க்கெட் இயங்கி வந்தது. மார்க்கெட் கட்டிடங்கள் சேதமடைந்ததால், கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு, அனிச்சம்பாளையம் சாலையில் மீன் மார்க்கெட் அமைக்க முடிவு செய்தனர்.கடந்த 2020ம் ஆண்டு விழுப்புரம் நகராட்சி சார்பில் ரூ.2.50 கோடி மதிப்பில் நவீன மீன் அங்காடி வளாகம் கட்டப்பட்டது. கடைகள் தேர்வு செய்து வழங்குவதில் இரு தரப்பிற்குள் பிரச்னை ஏற்பட்டதால் மார்க்கெட் திறக்காமல் கிடப்பில் போடப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு மீன் மார்க்கெட் வளாகத்தை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.அங்கு ரூ.60 லட்சம் மதிப்பில் தரை தளம், தார் சாலை உள்ளிட்ட கட்டமைப்புகளை செய்து, கடந்த 2024 மீன் மார்க்கெட் திறக்கப்பட்டது. தற்போது மீன் வியாபாரம் நடக்கிறது. மார்க்கெட்டிற்கு ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ராமேஸ்வரம், கடலுாரில் மீன்கள் வருகிறது.கடைகள் ஒதுக்குவதில் இரு தரப்புகளுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டதால், நகராட்சி நிர்வாகம் கடைகள் ஒதுக்கவில்லை. மார்க்கெட்டிற்கு மின் இணைப்பும் வழங்கவில்லை. இதனால், மார்க்கெட் வளாகத்தில் கட்டப்பட்ட மீன் அங்காடிகள் அடங்கிய கட்டிடம் பயன்பாட்டிற்கு வராமல் மூடியே வீணாகி கிடக்கிறது. மர்ம நபர்கள் கடைகளின் கதவுகளை உடைத்து வருகின்றனர். கடைகள் ஒப்படைக்காததால் மீன் வியாபாரிகள், திறந்த வெளியிலும், சாலையிலும் கடை அமைத்து மீன் வியாபாரம் செய்கின்றனர்.மின் வசதி இல்லாததால், அந்தந்த கடைகாரர்கள் ஜெனரேட்டர், பேட்டரி பயன்படுத்தி வருகின்றனர். மீன் விற்பனைக்கு கட்டியுள்ள கான்கீரீட் கூடார பகுதியில், மீன் ஏற்றும் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளது. மீன் மார்க்கெட் வளாகம் முழுவதும் குப்பைகள், மீன் கழிவுகள் கொட்டப்பட்டு சுகாதார சீர்கேடாக உள்ளது.மீன் கழிவுநீர் வெளியேறும் அருகில் உள்ள கால்வாயும் பராமரிப்பு இன்றி மூடி கிடக்கிறது. மீன்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் குளீரூட்டும் மையமும் இல்லை. மின்சார வசதி இல்லாததால், இரவு நேரங்களில் கடைகளில் வைத்துள்ள பொருட்கள் திருடப்படுவதாக வியாபாரிகள் குற்றம்சாட்டுகின்றனர். கடை ஒதுக்கீடு பிரச்னையால் ரூ.3.10 கோடி மதிப்பில் கட்டி திறக்கப்பட்ட நவீன மீன் மார்க்கெட் வளாகம், முழு பயன்பாட்டிற்கு வராமல் வீணாகி வருவதாக வியாபாரிகளும், மக்களும் வேதனை தெரிவிக்கின்றனர்.