கல்வியைப் போல விளையாட்டிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது மாஜி அமைச்சர் பொன்முடி பெருமிதம்
விழுப்புரம்: தமிழகம் கல்வி மட்டுமின்றி, விளையாட்டிலும் சிறந்து விளங்குவதாக, முன்னாள் அமைச்சர் பொன்முடி பேசினார். விழுப்புரத்தில் நடந்த முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழாவில் பங்கேற்ற அவர் பேசியதாவது: தமிழகத்தில் தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பிறகு விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, துணை முதல்வர் உதயநிதி பொறுப்பேற்ற பிறகு, விளையாட்டுத்துறைக்கு முக்கியத்துவம் அளித்து, உலகளவில், தமிழகம் சாதனை படைத்து வருகிறது. அந்த வகையில், முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடத்தி, மாநிலம் முழுதும் ஊக்கப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு, மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு தொகை வழங்கப்பட்டது. இவர்கள், அடுத்து மாநில அளவில் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். மாநில அளவிலான தனிநபர் பிரிவு போட்டிகளில் முதலிடம் பெறுபவருக்கு தலா 1 லட்சம் ரூபாய், 2ம் இடம் பிடிப்பவருக்கு தலா 75 ஆயிரம் ரூபாய், 3ம் இடம் பிடிப்பவருக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். தொடர்ந்து தேசிய அளவில், உலகளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று, தமிழகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும். தமிழக முதல்வர், விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியுள்ளார். விளையாட்டு வீரர்கள் உயர்கல்வி பயில்வதற்கும், வேலை வாய்ப்புக்கும் இந்த இட ஒதுக்கீடு பயனுள்ளதாக இருக்கும். கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. தற்போது, விளையாட்டிலும் சிறந்த மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது. இவ்வாறு பொன்முடி பேசினார்.