இறக்கும் முன்பே இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டவர் உயிரிழப்பு
விழுப்புரம்: இறக்கும் முன்பே இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு, கடைசி நேரத்தில் உயிர் இருப்பதை அறிந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நபர், இரு நாட்கள் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.விழுப்புரம் அடுத்த வெங்கடேசபுரத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ், 40; இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு, புதுச்சேரி மாநிலம், அரியூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவரது உடல்நிலை மோசமானதால், 'சில மணிநேரம் மட்டுமே பிரகாஷ் உயிருடன் இருப்பார்' என, டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் கடந்த 17ம் தேதி அவரது உறவினர்கள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அழைத்து சென்றனர்.ஆனால், பிரகாஷ் இறந்துவிட்டதாக உறவினர் ஒருவர் தெரிவித்த தகவலில், மற்ற உறவினர்கள் மாலையுடன் அவர் வீட்டிற்கு படையெடுத்தனர். வீட்டிலும், பிரிசர் பாக்ஸ், பந்தல், மேளம், சுடுகாட்டில் உடலை புதைக்க குழி தோண்டி, இறுதிச்சடங்கு நடத்த தேவையான பொருட்களை எல்லாம் வாங்கி வைத்துவிட்டனர்.இதற்கிடையே, மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்சில் வீட்டிற்குக் கொண்டு வரப்பட்ட பிரகாஷ், வீட்டிற்கு வந்ததும், உடல் அசைத்தார். அவர் உயிருடன் இருப்பதை அறிந்த உறவினர்கள், உடனடியாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.மேலும், தனியார் மருத்துவமனையிலும் தகராறு செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இரு நாட்கள் சிகிச்சை பலனின்றி, பிரகாஷ் நேற்று இறந்தார். பின்னர், அவரது இறுதிச் சடங்கிற்கான பணிகளை உறவினர்கள் இரண்டாவது முறையாக செய்தனர்.