பஸ் நிலையத்தில் தவித்த சிறுமி பெற்றோரிடம் ஒப்படைப்பு
விழுப்புரம்: விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் தாயை தவறவிட்டு தவித்த சிறுமியை மீட்ட போலீசார், பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், நாச்சியார்பேட்டையைச் சேர்ந்தவர் மணிகண்டன் மகள் இனியாஸ்ரீ, 9; இவர், அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார்.இவர், தனது தாய் சுபாஷினியோடு நேற்று முன்தினம் காலை வேனில் சக மாணவர்கள் 25 பேருடன், பள்ளி சார்பில் வேடந்தாங்கல், மாமல்லபுரத்திற்கு சுற்றுலா சென்றனர்.இரவு திரும்பிய போது, நள்ளிரவு 12:15 மணிக்கு ஒலக்கூர் அருகே ஒரு ஓட்டலில் சாப்பிடுவதற்காக நிறுத்தியுள்ளனர். இனியாஸ்ரீ துாங்கியதால் விட்டு விட்டு, தாய் சுபாஷினி உட்பட அனைவரும் ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டுள்ளனர்.வேனில் துாங்கிய சிறுமி எழுந்து தாயை தேடியவர், துாக்க கலக்கத்தில் விழுப்புரம் புறப்பட்ட தனியார் பஸ்சில் ஏறியுள்ளார்.இந்த பஸ் இரவு 1:00 மணிக்கு விழுப்புரம் புதிய பஸ் நிலையம் வந்தவுடன், சிறுமி இனியாஸ்ரீ தாய் மற்றும் சக மாணவர்களை காணாமல் அழுதுள்ளார்.இதனைப் பார்த்த அங்கிருந்த நபர் சிறுமியை புதிய பஸ் நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.போலீசார், சிறுமியின் தாய் மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்டதன் பேரில், 1:30 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்த அவர்களிடம், சிறுமியை போலீசார் ஒப்படைத்து அனுப்பி வைத்தார்.