குட்கா கடத்திய அரசு பஸ் கண்டக்டர் கைது
விழுப்புரம்; குட்கா கடத்திய அரசு பஸ் கண்டக்டரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் புதிய பஸ் நிலையம், திருவண்ணாமலை மார்க்க நிறுத்தத்தில் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் குணசேகர் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தார். அவர், விழுப்புரம் சாலாமேட்டை சேர்ந்த வீரமுத்து, 59; அரசு பஸ் கண்டக்டர் என்பதும், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி வந்தது தெரிய வந்தது. அவர் பெங்களூருவில் இருந்து குட்கா பாக்கெட்டுகளை பஸ்சில் வரவழைத்து, திருவண்ணாமலைக்கு சென்று வாங்கி வந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, போலீசார் அவரிடம் இருந்த குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். அவரை கைது செய்து, பெங்களூரு பஸ் டிரைவர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.