தேசிய வில்வித்தை போட்டிக்கு அரசு பள்ளி மாணவர் தேர்வு
விழுப்புரம்: தேசிய அளவிலான வில்வித்தை போட்டியில் பங்கேற்கும், தமிழக அணியில் விழுப்புரம் அரசு பள்ளி மாணவர் இடம் பிடித்துள்ளார். இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம் சார்பில், 2025-26ம் கல்வி ஆண்டிற்கான மாநில அளவிலான 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான வில் வித்தை விளையாட்டு போட்டி, சமீபத்தில் சென்னை சேத்துப்பட்டு நேரு பூங்கா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில், பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாணவர்கள் கலந்துகொண்டனர். அதில், விழுப்புரம் மாவட்டத்திலிருந்து, விழுப்புரம் காமராஜ் நகராட்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவர் ரோகித் பங்கேற்று, சிறப்பாக விளையாடி நான்காம் இடம் பிடித்து வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து, இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம் சார்பில், 69வது தேசிய அளவிலான வில் வித்தை போட்டி வரும், டிசம்பரில் மணிப்பூரில் நடக்கிறது. இதில் தமிழ்நாடு அணியின் சார்பாக பங்கேற்க ரோகித் தகுதி பெற்றுள்ளார். தேசிய வில்வித்தை போட்டியில் பங்கேற்கும் தமிழக அணியில் இடம் பிடித்துள்ள மாணவர் ரோகித்தை, விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் சால்வை அணிவித்து பாராட்டினர். அப்போது, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் ஜனசக்தி, பெருமாள், பள்ளி தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன், உதவி தலைமை ஆசிரியர் பன்னீர்செல்வம், ஆசிரியர்கள் பசுபதி, கணேசன், ராஜேந்திரன், உடற்கல்வி இயக்குநர் மணிவண்ணன், உடற்கல்வி ஆசிரியர் பிரகாஷ், ராமன் மற்றும் மாணவனின் பெற்றோர் சந்தோஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர். அரசு பள்ளி மாணவர் ரோகித், விழுப்புரம் மாவட்டத்திலிருந்து, அரசு பள்ளியின் சார்பாக கலந்துகொண்டு, தேசிய அளவிலான வில்வித்தை போட்டியில், இரண்டாவது முறையாக கலந்துகொள்வதற்காக தேர்வாகியுள்ளார். தமிழக அளவில், அரசு பள்ளியிலிருந்து முதல் மாணவராகவும் இவர் கலந்துகொள்வது குறிப்பிடத்தக்கது.