உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஓராண்டில் ரூ. 4 கோடி மோசடி ரூ. 42 லட்சம் மீட்பு: எஸ்.பி., தகவல்

ஓராண்டில் ரூ. 4 கோடி மோசடி ரூ. 42 லட்சம் மீட்பு: எஸ்.பி., தகவல்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் ஆன்லைன் வழியாக பணத்தை இழந்தவர்களுக்கு ரூ.23.46 லட்சத்தை மீட்டு சைபர் கிரைம் போலீசார் ஒப்படைத்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் மர்ம நபர்கள், பங்கு சந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டலாம், குறைந்த வட்டியில் கடன் தருகிறோம் என ஆசை வார்த்தை கூறி பொதுமக்களை ஏமாற்றி பணத்தை பறிக்கின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 4 மாதத்தில் பணத்தை இழந்த 35 நபர்கள் ரூ.42 லட்சத்து 50 ஆயிரத்து 755 பணத்தை மீட்டு அவரவர் வங்கி கணக்குகளில் சேர்த்துள்ளனர். இந்நிலையில் ஆன்லைன் மூலம் விக்கிரவாண்டி வேல்முருகன், மேல்மலையனுார் நவநீத கிருஷ்ணன், தளவானுார் அமிர்தலிங்கம், வானுார் பச்சமுத்து, விழுப்புரம் ஜெயகாந்தி, கீழ்பெரும்பாக்கம் ஆண்ட்ரூ ஆகியோர் ரூ. 23.46 லட்சம் பணத்தை சமீபத்தில் இழந்தனர். இதனை மீட்ட விழுப்புரம் சைபர் கிரைம் போலீசார், பணத்தை இழந்தவர்களின் வங்கி கணக்கில் செலுத்தினர். அதற்கான ஆவணங்களை, பாதிக்கப்பட்டவர்களிடம் எஸ்.பி., சரவணன் நேற்று வழங்கினார். பணத்தை மீட்ட சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி., தினகரன் தலைமையிலான இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா, சப்இன்ஸ்பெக்டர் ரவிசங்கர் மற்றும் போலீசாரை பாராட்டி, சான்றிதழ் வழங்கினார். எஸ்.பி., சரவணன் கூறியதாவது; சைபர் குற்றம் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், சைபர் குற்றங்கள் தொடர்கிறது. இந்தாண்டு 400 க்கும் மேற்பட்டோர் ரூ. 4 கோடி வரை இழந்துள்ளனர். இதில் கடந்த 4 மாதத்தில், 45 பேருக்கு ரூ. 42 லட்சம் மீட்டு நீதிமன்றம் மூலம் வழங்கியுள்ளோம்.முதலில் பணம் தருவது போல ஆசை காட்டுவதால், பொதுமக்கள் கடன் வாங்கி பணத்தை மர்ம நபர்களின் வங்கி கணக்கில் செலுத்தி ஏமாற்றுகின்றனர். பணத்தை மொத்தமாக இழந்து பின்பு, இறுதியாக போலீசாரிடம் வருகின்றனர். அதிக பணம் தருவது நிச்சியம் மோசடி என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். பணம் ஏமாற்றப்பட்டவுடன் உடனடியாக சைபர் கிரைம் போலீசுக்கு புகார் தெரிவித்தால், மர்ம நபர்களின் வங்கி கணக்கை முடக்கம் செய்து இழந்த பணத்தை மீட்க முடியும் என கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை