விழுப்புரத்தில் பாதாள சாக்கடை பணியை விரைந்து முடிக்க... அறிவுறுத்தல்: நகராட்சி நிர்வாக இயக்குநர் திடீர் ஆய்வு
விழுப்புரம், செப். 8- விழுப்புரம் நகராட்சி பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளை விரைந்து முடிக்குமாறு நகராட்சிகள் நிர்வாக இயக்குநர்மதுசூதன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் நகராட்சியில், கடந்த 2007ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியில் பாதாள சாக்கடைத் திட்டம் துவங்கியது. நகர பகுதிகளில் வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை சேகரிக்கும் பொருட்டு 14 ஆயிரத்து 150 குடியிருப்புகளை இணைத்து, 165. 68 கி.மீ., நீளத்திற்கு ரூ.263 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்காடை திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், சாலமேடு பகுதியில் ரூ. 26. 8 கோடி மதிப்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பாதாள சாக்கடைப் பணிகள் மந்தமாக நடைபெறுவதால், ஆண்டுக் கணக்கில் இழுபறியாக உள்ளது. திட்டப் பணிகள், 18 ஆண்டுகளாகியும் இழுபறியாக உள்ளதை குறிப்பிட்டு, கடந்த சில தினங்களுக்கு முன், தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து தமிழக நகராட்சி நிர்வாக இயக்குநர் மதுசூதன் ரெட்டி, விழுப்புரம் நகரில் நேற்று முன்தினம் 'திடீர்' ஆய்வு மேற்கொண்டார். நகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்தின் வளர்ச்சி திட்டப்பணிகளை நேரில் பார்வையிட்டார். திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் தாமதத்திற்கான காரணங்கள் குறித்தும், கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான், விளக்கிக் கூறினார். பின்னர், நகராட்சி நிர்வாக இயக்குநர் மதுசூதன் ரெட்டி கூறியதாவது: விழுப்புரம் நகராட்சி, பாண்டியன் நகர் பகுதியில் நகராட்சி நிர்வாகம் மூலம், பராமரித்தல் மற்றும் செயல்படுத்துதல் திட்டத்தின்கீழ், ரூ.6.20 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வெளியேற்றுவதற்கான திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி, 1.45 கி.மீ., துாரத்திற்கு குழாய் பதிக்கும் பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் மழைநீர் பாண்டியன் நகர் பகுதிக்கு மழைநீர் செல்வதற்கான வழிவகைகள், சாலாமேடு ஏரிக்கு செல்வதற்கான வழித்தட வாய்க்கால் பகுதியும் ஆய்வு செய்யப்பட்டது. விழுப்புரம் மகாஜபுரம் பகுதியில் ரூ. 1.48 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன எரிவாயு மின்தகன மேடை பணி நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விழுப்புரம் - சென்னை ரோடு, அய்யங்கோவில்பட்டு அருகே ரூ.10.65 கோடி செலவில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய பணியும் ஆய்வு செய்யப்பட்டது. அதே பகுதியில் ரூ.1.03 கோடி மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகளை அகற்றும் பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. இதேபோல், மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில் நடைபெறும் வளர்ச்சி திட்டப் பணிகளை விரைந்து முடிக்கவும், முடிவுற்ற திட்ட பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், துறை அலுவலர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் செய்தி எதிரொலி
விழுப்புரம் நகராட்சியில், கடந்த 2007 ம் ஆண்டு பாதாள சாக்கடைத் திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டப் பணிகள் துவங்கி, 18 ஆண்டுகளாகியும் இழுபறியாக உள்ளதை குறிப்பிட்டு, கடந்த சில தினங்களுக்கு முன், தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து தமிழக நகராட்சி நிர்வாக இயக்குநர் மதுசூதன் ரெட்டி, விழுப்புரம் நகரில் நேற்று முன்தினம் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். ஆய்வின் போது, கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் நாராயணன், மண்டல பொறியாளர் சுரேந்திரன், நகராட்சி கமிஷனர் வசந்தி, பொறியாளர் புவனேஸ்வரி, குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் சிவக்குமார், நகராட்சி உதவி பொறியாளர் ராபட் ஆகியோர் உடனிருந்தனர்.