உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கண்டமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி தமிழக கபடி அணிக்கு தேர்வு

கண்டமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி தமிழக கபடி அணிக்கு தேர்வு

கண்டமங்கலம்: தமிழக பெண்கள் கபடி அணிக்கு கண்டமங்கலம் வள்ளலார் அரசு மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1 மாணவி தீபிகா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.கண்டமங்கலம் ஒன்றியம், நவமால்மருதுார் கிராமத்தை சேர்ந்த கலைச்செல்வன்-சசிபிருந்தா தம்பதியரின் மகள் இரண்டாவது மகள் தீபிகா (16) கண்டமங்கலம் வள்ளலார் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். சிறு வயது முதலே விளையாட்டில் ஆர்வமுடைய தீபிகா பள்ளியில் நடைபெறும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தி வந்துள்ளார்.அதே கிராமத்தில் செயல்பட்டு வரும் ஸ்பார்டன்ஸ். ஸ்போர்ட்ஸ் கிளப்பில் சேர்ந்து பயிற்சியாளர் பாலாவிடம் கடந்த 5 ஆண்டுகளாக கபடி பயிற்சி பெற்று வருகிறார்.இந்த நிலையில், இந்திய பள்ளிக் கல்வி குழுமத்தில் சார்பில் கடந்த செப்.2ம் தேதி விழுப்புரத்தில் நடைபெற்ற கடலுார் மண்டல அளவிலான பெண்கள் கபடிப்போட்டி யில் 7 மாவட்டங்களை சேர்ந்த வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.இதில் தீபிகா தேர்வு செய்யப்பட்டார்.இதைத்தொடர்ந்து கடந்த அக். 2ம் தேதி தமிழக பெண்கள் கபடி அணிக்கான மாநில அளவிலான தேர்வு திருப்பூரில் நடந்தது. இதில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 56 வீராங்கனைகள் கலந்துகொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.இப்போட்டியில் தமிழக பெண்கள் கபடி அணிக்கு 12 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் கண்டமங்கலம் வள்ளலார் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி தீபிகா சிறப்பாக விளையாடி தமிழக பெண்கள் கபடி அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இதன் மூலம் மத்தியபிரதேச மாநிலத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான மகளிர் கபடி போட்டியில் தமிழக பெண்கள் கபடி அணியில் விளையாட மாணவி தீபிகா தகுதி பெற்றுள்ளார்.இது குறித்து மாணவி தீபிகா கூறுகையில் எனது தந்தை கலைச்செல்வன், தாயார் சசிபிருந்தா ஆகியோர் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற ஒத்துழைப்பு அளித்தனர். பள்ளி தலைமையாசிரியர் ஜேவியர்சந்திரகுமார் படிப்பிலும், விளையாட்டிலும் சாதிக்க வேண்டும் என என்னை ஊக்குவித்து வந்தார். நவமால்மருதுார் கிராமத்தில் கபடி பயிற்சியாளர் பாலாவிடம் கடந்த 5 ஆண்டுகளாக பெற்ற பயிற்சி எனது வெற்றிக்கு வழிவகுத்தது. இதன் மூலம் தற்போது தமிழக பெண்கள் கபடி அணிக்கு மூன்றாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை