உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஆசிரியர்களின் நாற்றங்கால் என அழைக்கப்படும் நல்லாண்பிள்ளை பெற்றாள் அரசு மேல்நிலை பள்ளி 150க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை உருவாக்கி சாதனை

ஆசிரியர்களின் நாற்றங்கால் என அழைக்கப்படும் நல்லாண்பிள்ளை பெற்றாள் அரசு மேல்நிலை பள்ளி 150க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை உருவாக்கி சாதனை

வி ழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒன்றியத்தில், நல்லாண்பிள்ளை பெற்றாள் கிராமத்தில் அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. கல்வியே உயர்வுக்கு வழி என்ற வார்த்தையை தாரக மந்திரமாக கொண்டு கல்வி கற்பதில் காட்டும் அக்கறையினால் இப்பள்ளி சாதனை பள்ளியாக திகழ்ந்து வருகிறது. கடந்த 1882ம் ஆண்டு துவக்கப்பள்ளியாக துவங்கப்பட்டது. 1952ம் ஆண்டு நடுநிலைப் பள்ளியாகவும், 1961ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாகவும், 2006ம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்ந்தது. இப்பள்ளியில், படித்து இதுவரை 150க்கும் மேற்பட்டவர்கள் ஆசிரியர்களாக உள்ளனர். இதனால் இந்த பள்ளியை ஆசிரியர்களின் நாற்றங்கால் என அழைக்கப்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி இங்கு படித்தவர்கள் அரசியலில் குறிப்பிடும் அளவிற்கான பதவிகளில் உள்ளனர். டாக்டர்கள், பேராசிரியர்கள், நீதிபதிகள், தலைமையாசிரியர்கள், தமிழக அரசின் கல்வி, வேலை வாய்ப்பு, தடயவியல் என பல்வேறு துறைகளில் இணை இயக்குநர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், நிதியமைச்சகத்தில் முக்கிய பணியிலும் உள்ளனர். இது மட்டுமின்றி சர்வதேச அளவில் பிரபலமான தனியார் நிறுவனங்களில் ஆசிய அளவிலான உயர் பதவியிலும், வருவாய்த்துறை, ஐ.டி.,. ஊழியர்கள் என இங்கு படித்தவர்கள் தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவிலும், உலக அளவிலும் உயர் பதவியில் உள்ளனர். இப்பள்ளியில் மாணவர்களுக்கு கல்வி வழங்குவதோடு, ஒழுக்கம், மனிதநேயம், பொது அறிவு ஆகியவற்றையும் வளர்க்கிறது. மேலும் விளையாட்டுப் போட்டிகள், கலாசார நிகழ்ச்சிகள், அறிவியல் கண்காட்சிகள், யோகா பயிற்சி, கலைக்கழகப் போட்டிகள் போன்ற பல துறைகளில் தங்களை நிலைநிறுத்திக் கொள்கிறார்கள். மாணவர்களுக்கான நுாலகம், ஆய்வுக்கூடம், கணினி பிரிவு போன்ற வசதிகள் மாணவர்களின் அறிவுத்தாகத்தை வளர்க்கின்றன. தொடர்ந்து கடந்த ஐந்து ஆண்டுகளாக 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொது தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆசிரியர்களின் அர்ப்பணிப்பால் இப்பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தை ஒளிரச் செய்யும் கலங்கரை விளக்கமாக திகழ்கிறது.

தேசப்பற்றை நிலைநாட்டிய

பெருமைக்குரியவர்கள்

ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடந்த சத்தியாகிரக போராட்டத்தில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு நாட்டு விடுதலைக்காக சிறை சென்ற மறைந்த தியாகிகள் திருவேங்கடம், பழனிசாமி, சிவலிங்கனார் ஆகியயோர் இங்குள்ள ஆரம்ப பள்ளியின் முன்னாள் மாணவர்கள் என்பது பெருமைக்குரியது.

பல தலைமுறைகளுக்கு

சிறந்த வழிகாட்டி

ஆசிரியர்களின் நாற்றங்கால் என அழைக்கப்படும் இப்பள்ளி கல்வியிலும், பண்பாட்டிலும் சிறந்து விளங்குகிறது. கல்வி என்பது சமூக முன்னேற்றத்திற்கான அடிப்படை என்பதை கருத்தில் கொண்டு பல தலைமுறைகளுக்கு சிறந்த வழிகாட்டியாக, தரமான கல்வியை வழங்குகிறது. ஒழுக்கம், மனிதநேயம், பொது அறிவு ஆகியவற்றையும் வளர்க்கிறது. 'அறிவும் ஒழுக்கமும் உடையவர் உயர்வர்' என்பதற்கான உயிர்நிலை சான்றாக இப்பள்ளி திகழ்கிறது. - பாவலர் மரிய தமிழரசி, ஆசிரியை

அர்ப்பணிப்புடன்

பணிபுரியும் ஆசிரியர்கள்

ஆசிரியர்களின் நாற்றங்கால் என்ற பெருமைக்குரிய பள்ளியில் நான் முன்னாள் மாணவர். இன்று அதே பள்ளியில் தொடக்கப்பள்ளிக்கு தலைமையாசிரியர். ஆசிரியர்கள் தன்னிகரில்லாத அர்ப்பணிப்புடன் கற்பித்து வருகின்றனர். வல்லவர்களாக மட்டுமின்றி, மாணவர்களை நல்லவர்களாகவும் வளர்த்தெடுப்பதில் ஆசிரியர்கள் கவனத்துடன் இருக்கின்றனர். பள்ளியின் குடிநீர், கணினி வசதியுடன், வகுப்பறையை புத்தாக்கமும் செய்துள்ளனர். இதுவரை சாதித்திருப்பதைவிட எதிர்காலத்தில் மேலும் சாதனைளை இப்பள்ளி மாணவர்கள் நிகழ்த்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. -அறிவழகன், துவக்கப்பள்ளி தலைமையாசிரியர்.

முன்னாள் மாணவர்

என்பதில் பெருமை

நான் படித்த பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் என்பதில் கூடுதல் பெருமை கொள்கிறேன். பள்ளியில் பயின்ற மாணவர்கள் பலர் இன்று அரசியலிலும், அரசுத்துறையிலும் உயர்ந்த பதவிகளில் உள்ளனர். முன்னாள் மாணவர் சிற்றரசு, தற்போது சென்னை மாநகராட்சி கவுன்சிலராகவும், மாநகராட்சி பணிகள் குழு தலைவராகவும் உள்ளார். இவர் பள்ளியின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகிறார். தொகுதி எம்.எல்.ஏ., மஸ்தான் பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டடங்கள், ஆய்வகம் போன்ற அத்தியாவசிய வசதிகளை செய்து கொடுத்துள்ளார். -டாக்டர் கதிர்வேல், பி.டி.ஏ., தலைவர்.

பள்ளி வளர்ச்சிக்கு

கல்வி அமைச்சர் ஆதரவு

45 ஆண்டுகளாக இருந்த உயர்நிலைப் பள்ளியை கிராம மக்கள் தற்போது எம்.எல்.ஏ.,வாக உள்ள மஸ்தானுடன் இணைந்து எடுத்த தொடர் முயற்சியால் 2006ம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர், சென்னை மாநகராட்சி கவுன்சிலர் சிற்றரசு, மஸ்தான் எம்.எல்.ஏ., ஆகியோர் பள்ளிக்கு கட்டட வசதிகளையும், அடிப்படை வசதிகளையும் செய்வதில் கவனம் செலுத்தி வருகின்றனர். இவர்களின் ஏற்பாட்டில் கல்வியமைச்சர் மகேஷ் பள்ளியில் ஆய்வு செய்து பள்ளியின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஆதாரவளித்து வருகிறார். -கதிரவன் சீனு, முன்னாள் மாணவர்.

கல்விக்காக அடித்தளமிட்டவர்களை

பெருமையுடன் நினைவு கூறும் மக்கள்

இப்பள்ளி ஒவ்வொரு முறையும் வளர்ச்சி படிநிலை வந்த போது, விரிவாக்கம் செய்வதற்கான இடம் கிடைப்பதில் பெரும் சவாலாக இருந்தது. தொடக்கப் பள்ளியாக தரம் உயர்ந்த போது கூடுதல் கட்டடம் கட்ட திரவுபதியம்மன் கோவில் பரம்பரை தர்மகர்த்தா குடும்பத்தினரும், உயர்நிலை பள்ளியாக தரம் உயர்ந்த போது சாவடி நாராயணசாமி பாகவதர் தலைமையில் இயங்கி வந்த வகுளபூஷண பாஸ்கர சபையினர் சபை கட்டடத்தையும் பள்ளிக்காக வழங்கினர். பெரிய வகையறா செவலை வீட்டு குடும்பத்தார் 3 ஏக்கர் நிலத்தை பள்ளிக்கு தானமாக வழங்கினர். இது போன்று கல்விக்காக அடித்தளமிட்டவர்களை கிராம மக்கள் இன்றளவும் பெருமையுடன் நினைவு கூர்ந்து வருகின்றனர். -கதிரவன், முன்னாள் மாணவர், நிலவள வங்கி அலுவலர்,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ