மாற்றுத்திறன் பிள்ளைகளுக்கு கிடைத்தது பராமரிப்பு தொகை
விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த மேல்காரணையை சேர்ந்த கூலி தொழிலாளி வெங்கடேசன். இவரது மகன் கோவிந்தன், 26; மகள் புவனேஸ்வரி, 24. இருவரும் மாற்றுத் திறனாளிகள். இருவருக்கும் அரசு வழங்கிய மாதாந்திர உதவித்தொகை ஆறு மாதங்களாக நிறுத்தப்பட்டது. அதை மீண்டும் வழங்க பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.இந்நிலையில், நேற்று முன்தினம், கை, கால்கள் செயல்படாத மாற்றுத் திறனாளி மகன் கோவிந்தனை, காய்கறி பெட்டியில் வைத்து துாக்கி வந்து, விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் வயதான பெற்றோர் மனு அளித்தனர்.இது குறித்து, 'இப்படி பண்றீங்களே ஆபீசர்ஸ்' என்ற தலைப்பில் நம் நாளிதழில் விரிவான செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக விழுப்புரம் கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் உடனடியாக விசாரணை நடத்தி, மாற்றுத் திறனாளிகள் இருவருக்கும் உடனடியாக பராமரிப்பு தொகை வழங்க நேற்று நடவடிக்கை எடுத்துள்ளார்.அவர்களின் ஆதார் பதிவு இல்லாததால், செலுத்தப்பட்ட உதவித் தொகை திரும்ப வந்ததாகவும், ஆதார் பதிவு மேற்கொள்ள தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், நிலுவையுடன் சேர்த்து பராமரிப்பு தொகை வழங்கப்பட்டது.