உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / செய்தி சில வரிகளில்...

செய்தி சில வரிகளில்...

தெருமுனை பிரசாரம்

விக்கிரவாண்டி நகர வி.சி., கட்சி சார்பில் பஸ் நிலையத்தில் மது, போதை ஒழிப்பு பிரசாரம் நடந்தது. மாவட்ட செயலாளர் திலீபன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தார் .நகர செயலாளர் சந்துரு வரவேற்றார். விக்கிரவாண்டி கடை வீதியில், மது ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கி பிரசாரம் செய்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் செல்லதுரை, நகர செயலாளர் கோமளா, மகளிர் அணி ஒன்றிய செயலாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

சாலை பணி துவக்கம்

விழுப்புரம் நகராட்சி சார்பில், பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முடிந்த 9வது வார்டுக்குட்பட்ட தக்கா தெரு பகுதியில், 20.20 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய சிமென்ட் சாலை பணி நேற்று நடந்தது. இப்பணியை நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பார்வையிட்டார். தி.மு.க., நகர செயலாளர் சக்கரை, கவுன்சிலர்கள் பிரியா பிரேம், கோமதி பாஸ்கர் உட்பட பலர் உடனிருந்தனர்.

மொபைல் போன் டவர் அகற்ற கோரிக்கை

விழுப்புரம், கீழ்ப்பெரும்பாக்கம், ஷர்மிளா நகர் பகுதியில், தனியார் நிறுவனம் மொபைல் போன் டவரை அமைத்து வருகிறது. அனுமதி பெறாமல் கட்டப்பட்டு வருகிறது. 50 சதவீதம் முடிந்த நிலையில், எப்போது வேண்டுமானாலும் சரிந்து விழும் ஆபத்துள்ளது. பாதுகாப்பு இல்லாமல் சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

இடத்தை அபகரிக்க முயற்சி: மக்கள் மனு

விழுப்புரம் அடுத்த உடையந்தாங்கல் அரும்பூண்டி கிராமத்தில், 20 குடும்பத்தினர், நீண்டகாலமாக வசித்து வருகிறோம். எங்களுக்கு அரசு சார்பில், இலவச மனைப்பட்டா வழங்கினர். எங்கள் கிராமத்தைச் சேர்ந்த தனி நபர் தனது நிலத்திற்கு செல்ல பாதை அமைப்பதற்காக, பட்டா இடத்தின் ஒரு பகுதியை அபகரிக்க முயற்சி செய்து வருகிறார். ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

பனை விதை சேகரிப்பு

தமிழ்நாடு விவசாயிகள் விழிப்புணர்வு சங்கம் சார்பில் தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளில் 1 கோடி பனை விதைகளை நடவு செய்ய திட்டமிட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக வல்லம் ஒன்றியம் பனப்பாக்கம், மேல்சித்தாமூர், நாட்டார்மங்கலம் கிராமங்களில் மயிலம் தொகுதி எம்.எல்.ஏ., சிவக்குமார் சங்க நிர்வாகிகளுடன் பனை விதை சேகரிப்பில் ஈடுபட்டார். மாநிலத் தலைவர் ரிஸ்வான் அப்துல்லா, பொதுச்செயலாளர் அய்யனார், பா.ம.க., மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் சரவணன் மற்றும் தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

என்.எஸ்.எஸ்., முகாம்

கண்டாச்சிபுரம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் என்.எஸ்.எஸ்., முகாமை சி.இ.ஓ., அறிவழகன் பார்வையிட்டு மரக்கன்று நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பள்ளியின் கழிவறை வசதி மற்றும் காலாண்டுத் தேர்விற்கான முன் தயாரிப்புகள் குறித்தும் தலைமை ஆசிரியரிடம் கேட்டறிந்தார். தலைமை ஆசிரியர் ஜெயசீலன், என்.எஸ்.எஸ்., அலுவலர் காளிமுத்து, கணினி ஆசிரியர் குரு பங்கேற்றனர்.

மாற்று கட்சியினர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்

கண்டமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட வி.நெற்குணம் மற்றும் முட்ராம்பட்டு பகுதியைச் சேர்ந்த 50 பேர் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி, மாவட்ட செயலாளர் செயலாளர் சண்முகம் முன்னிலையில் அ.தி.மு.க., வில் இணைந்தனர். சக்கரபாணி எம்.எல்.ஏ., வானுார் ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், கண்டமங்கலம் ஒன்றிய பேரவை செயலாளர் முருகன், வடக்கு ஒன்றிய செயலாளர் கண்ணன், மாவட்ட கலை பிரிவு செயலாளர் முருகன் உடனிருந்தனர்.

ரேஷன் கடை திறப்பு விழா

கண்டமங்கலம் அடுத்த கொங்கம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட ரங்கரெட்டிப்பாளையம் கிராமத்தில் 13 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட ரேஷன் கடையை ஊராட்சி தலைவர் ரவிச்சந்திரன், ஒன்றிய கவுன்சிலர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தனர். ஒன்றிய சேர்மன் வாசன் ரேஷன் கடையை திறந்து வைத்தார். மத்திய ஒன்றிய தி.மு.க., செயலாளர் செல்வமணி, பி.டி.ஓ.,க்கள் மணிவண்ணன், சிவக்குமார், துணை செயலாளர் குமணன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ரீகன் பங்கேற்றனர்.

பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம்

திருவெண்ணெய்நல்லுார் பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்திற்கு, சேர்மன் அஞ்சுகம் கணேசன் தலைமை தாங்கினார். துணைச் சேர்மன் ஜோதி முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் முரளி வரவேற்றார். இளநிலை உதவியாளர் பாலமுருகன் தீர்மானம் வாசித்தார். கூட்டத்தில், அனைத்து வார்டுகளுக்கும் வளர்ச்சி திட்டப் பணிகளை முறையாக வழங்க வேண்டும். விரிவாக்கம் செய்யப்பட்ட 1, 2வது வார்டு பகுதிகளில் ரேஷன் கடை, தெரு விளக்கு, கால்வாய் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்து பேசினர்.

ஊட்டச்சத்து விழிப்புணர்வு

வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் என்.எஸ்.எஸ்., மற்றும் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணி திட்டம் சார்பில் நடந்த ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் வில்லியம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் வானுார் ஒன்றிய சேர்மன் உஷா பேசினார். குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் ஜெகதீஸ்வரி, டாக்டர்கள் சண்முகம், லாவண்யா உட்பட பலர் பங்கேற்றனர். என்.எஸ்.எஸ்., அலுவலர் அருளமுதம் நன்றி கூறினார்.

விழிப்புணர்வு ஊர்வலம்

திண்டிவனம் சர்வீஸ் லயன்ஸ் சங்கம், லயன்ஸ் சர்வீஸ் ட்ரஸ்ட், புனித பிலோமினாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் நடந்த போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்திற்கு, லயன்ஸ் சர்வீஸ் ட்ரஸ்ட் தலைவர் ஆனந்த் தலைமை தாங்கினார். குளூனி சபையின் முன்னாள் மாநில தலைவி மார்க், தலைமையரியை வளர் இந்திரா, பாக்கியமேரி முன்னிலை வகித்தனர். லயன்ஸ் கூட்டு மாவட்ட முன்னாள் தலைவர் இளங்கோவன் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். நிர்வாகிகள் ஆனந்தகுமார் சின்னராசு, கஸ்துாரிரங்கன், சரவணன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ