| ADDED : டிச 10, 2025 09:28 AM
விழுப்புரம்: மாஜி அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கில், கனிம வளத்துறை உதவி இயக்குனர் விழுப்புரம் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். விழுப்புரம் மாவட்டம், வானுார் தாலுகா பூத்துறை செம்மண் குவாரியில் விதிமீறி செம்மண் எடுத்து அரசுக்கு 28.36 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக, மாஜி அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி, மற்றும் 6 பேர் மீது, 2012ம் ஆண்டு, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. லோகநாதன் என்பவர் இறந்து விட்டார். அரசு தரப்பு சாட்சிகள் 57 பேரிடம் விசாரணை முடிந்தது. இதில், 30 பேர் பிறழ் சாட்சியம் அளித்தனர். நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பொன்முடி, கவுதமசிகாமணி உள்ளிட்ட 5 பேர் ஆஜராகவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் 9 சாட்சிகளிடம் விசாரணை நடத்த அனுமதி கேட்டு, மனு தாக்கல் செய்தனர். அதன்படி, விழுப்புரம் கனிமவளத்துறை உதவி இயக்குனர் ரமேஷ்குமார், நேற்று ஆஜரானார். அவரிடம், கவுதமசிகாமணி தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை நடத்தினர். வழக்கை 18ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி மணிமொழி உத்தரவிட்டார்.