உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பருவ மழை முன்னெச்சரிக்கை பயிர் பாதுகாப்பு நடவடிக்கைக்கு அறிவுறுத்தல்

பருவ மழை முன்னெச்சரிக்கை பயிர் பாதுகாப்பு நடவடிக்கைக்கு அறிவுறுத்தல்

விக்கிரவாண்டி : பருவ மழையில் தோட்டக்கலை பயிர்கள் பாதிப்படையாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, விக்கிரவாண்டி வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஜெய்சன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்த செய்திக்குறிப்பு: விவசாயிகள் தங்களுடைய வயல்களில் பல ஆண்டுகளாக நீடிக்கக் கூடிய தோட்டக்கலை பயிர்களான மா ,பலா ,முந்திரி, எலுமிச்சை, நெல்லி, சப்போட்டா போன்ற மரங்களில் உள்ள காய்ந்த மற்றும் பட்டுப்போன கிளைகளை மரத்தின் எடையை குறைக்கும் வகையில் வெட்டி அகற்றி, மரத்தின் அடியில் மண்ணை அணைத்து பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும். தோட்டங்களில் தேவையான வடிகால் வசதியை ஏற்படுத்தி வேர் பகுதியில் நோய் தடுப்பு மருந்துகளை தெளிக்க வேண்டும். வருடாந்திர பயிர்களான வாழை மரங்கள் காற்றில் சாயாதவாறு பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும். 75 சதவீதம் முதிர்ந்த வாழைத்தார்கள் அறுவடை செய்ய வேண்டும். மிளகாய், தக்காளி, கொடிவகை காய்கறிகள் , பூ பயிர்களுக்கு அதிக நீர் தேங்கா வண்ணம் உரிய வடிகால் வசதி செய்து நீர்ப்பாசனம், உரமிடுதல் பணியை தற்காலிகமாக நிறுத்த வேண்டும். காய்கறி பயிர்களான வெண்டை, மரவள்ளி, கத்தரி காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க காற்று வீசும் திசைக்கு எதிர்திசையில் குச்சிகளால் முட்டுகொடுக்க வேண்டும். வயல்களில் தேவையான பயிர் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ