வாகன ஆய்வுக்கு இடமில்லாமல் அதிகாரிகள்... தவிப்பு: தினமும் இடம் தேடி அலையும் அவலம்
விழுப்புரம்: விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு மைதானம் இல்லாததால், புதிய வாகன பதிவு, எப்.சி., மற்றும் லைசென்ஸ் பெற வருவோர் மட்டுமின்றி அதிகாரிகளும் அவதியடைந்து வருகின்றனர். விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில், வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட புதிய வாகனங்கள் பதிவு, பர்மிட், டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட போக்குவரத்து துறை தொடர்பான அனைத்து பணிகளும் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. மேலும் புதிய வாகனங்களுக்கான பதிவு, எப்.சி., மற்றும் விபத்து வாகனங்கள் எம்.ஐ., காட்டுதல், லைசென்ஸ் பெறுவோர் வாகனத்தை ஓட்டி காட்டுதல் உள்ளிட்டவைகளுக்காக தினந்தோறும் நுாற்றுக்கணக்கானோர் வாகனங்களுடன் வந்து செல்கின்றனர். இந்த ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு வாகன ஆய்வுகளுக்கு என தனியாக மைதானம் இல்லை. இதனால் தினந்தோறும் நடக்கும் புதிய வாகன பதிவுகள், எப்.சி., மற்றும் லைசென்ஸ் பெறுவதற்காக வாகனம் ஓட்டுதல் உள்ளிட்டவை, விழுப்புரம் நகரின் வெளிப்புற பகுதியான ஜானகிபுரம், திருப்பச்சாவடிமேடு ஆகிய இடங்களில் உள்ள காலியிடங்களில் நடந்து வருகிறது. குறைந்த வாகனங்கள் இருந்தால், பெருந்திட்ட வளாக மைதானத்தில் இப்பணி மேற்கொள்ளப்படுகிறது. இதனால், வாகனங்களை உரிமையாளர்கள் நகரில் இருந்து 5 கி.மீ., துாரத்தில் உள்ள இடங்களுக்கு எடுத்து சென்று பதிவு செய்து, எப்.சி., மற்றும் எம்.ஐ., காட்டி வருகின்றனர். மேலும், இன்று எந்த இடத்தில் புதிய வாகன பதிவு செய்யும் பணி, எப்.சி., மற்றும் ஆய்வு பணி நடக்கும் என்பது வாகன உரிமையாளர்களுக்கு தெரியாத அவல நிலை நீடித்து வருகிறது. இதனால், அதிகாரிகள், எம்.ஐ., பணிக்கு வரும் காவல்துறையினர், வாகன உரிமையாளர் மற்றும் புதிய வாகனம் பதிவு செய்வோர் தினந்தோறும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மாவட்ட தலைநகரில் உள்ள ஆர்.டி.ஓ., அலுவ லக அதிகாரிகள் எப்.சி., உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள தனியாக மைதானம் இல்லாதது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் ஆர்.டி.ஓ., அலுவலக பயன்பாட்டிற்கென தனியாக மைதானம் ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.