| ADDED : மார் 18, 2024 03:43 AM
மயிலம், : மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம் வரும் 23ம் தேதி நடக்கிறது.மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமி கோவிலில் கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர விழா துவங்கியது. அதனையொட்டி தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடக்கிறது.நேற்று காலை 6:00 மணிக்கு விநாயகர், பாலசித்தர், வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. 11:00 மணிக்கு வெள்ளி விமானத்தில் வள்ளி தெய்வானை சுப்ரமணிய சுவாமி கிரிவலம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு வெள்ளி நாக வாகனத்தில் உற்சவர் அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.வரும் 19ம் தேதி இரவு 8:00 மணிக்கு தங்க மயில் வாகனத்தில் சுவாமி அருள்பாலிக்கிறார். 22ம் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவமும் வெள்ளி குதிரை வாகனத்தில் மலை வலக்காட்சியும் நடக்கிறது.தொடர்ந்து 23ம் தேதி தேர் திருவிழா நடைபெற உள்ளது. 24ம் தேதி காலை தீர்த்த வாரி உற்சவமும் தொடர்ந்து இரவு தெப்பல் உற்சவமும் நடக்கிறது. 25ம் தேதி முத்து பல்லக்கு உற்சவம் நடக்கிறது.ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் இருபதாம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்து வருகிறார்.