விழுப்புரம் அரசு பள்ளியில் பெற்றோர் வாக்குவாதம்
விழுப்புரம்: போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விழுப்புரம் அரசு பள்ளியில் பெற்றோர், உதவி தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. விழுப்புரம், பானாம்பட்டு பாதையை சேர்ந்தவர் சிவபாலன், 48; நகரில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் பகுதிநேர உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். உடற்கல்வி பாடவேளையின்போது ஏழாம் வகுப்பு மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக, கடந்த 22ம் தேதி சிவபாலனை போக்சோ சட்டத்தில் விழுப்புரம் மகளிர் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், நேற்று காலை 25 மாணவர்கள் பள்ளி நுழைவு வாயிலில் கைது செய்யப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக தர்ணாவில் ஈடுபட்டனர். தகவலறிந்த விழுப்புரம் டவுன் போலீசார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிக்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் மாணவர்கள் கலைந்து சென்றனர். இதையடுத்து, பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து, இச்சம்பவம் குறித்து தங்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என உதவி தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து, அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.