குடியிருப்புகளை சூழ்ந்த கழிவுநீர் போராட்டத்தில் ஈடுபட மக்கள் முடிவு
விழுப்புரம்: விழுப்புரம் அபேஷாதக்கா வீதியில் கழிவுநீர் குடியிருப்பை சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் தேர்தலில் ஓட்டு போடுவதில்லை எனவும், போராட்டத்தில் ஈடுபடவும் முடிவு செய்துள்ளனர். விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட 11வது வார்டில் அபேஷாதக்கா வீதி உள்ளது. இங்கு, 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த பகுதியில் பல மாதங்களாக கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால் கழிவுநீர் வீடுகளை சூழ்ந்து, பொதுமக்கள் வெளியே வர முடியாதபடி தேங்கி நிற்கிறது. மேலும், பாதாள சாக்கடையிலும் அடைப்பு ஏற்பட்டு, அதன் மூலம் வெளியேறும் கழிவுநீரும் கலந்து தேங்கியுள்ளது. இதனால், இப்பகுதி மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் நிலை உள்ளது. இது பற்றி, இங்குள்ள மக்கள், பல முறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும், யாரும் கழிவுநீரை அப்புறப்படுத்துவதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. விரைவாக, இங்குள்ள பிரச்னைகளுக்கு நகராட்சி நிர்வாகம் நிரந்தர தீர்வு காணவில்லை எனில், வீதிக்கு வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதோடு, வரும் தேர்தலில் எந்த கட்சிக்கும் ஓட்டு போட போவதில்லை என மக்கள் தீர்மானித்துள்ளனர்.