ரயில்நிலையத்திலுள்ள ஆர்.எம்.எஸ்.அலுவலகத்தை மூடுவதற்கு திட்டம்! திண்டிவனம் பகுதியை சேர்ந்த அனைத்து தரப்பு மக்களும் பாதிப்பு
திண்டிவனம்; திண்டிவனம் ரயில் நிலையத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த ஆர்.எஸ்.எஸ்.அலுவலகம் மூடப்பட உள்ளதால், அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.திண்டிவனத்திலுள்ள ரயில் நிலைய வளாகத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த ஆர்.எம்.எஸ்., (ரயில்வே மெயில் சர்வீஸ்) செயல்பட்டு வருகின்றது . இந்த அலுவலகத்தை நிரந்தரமாக மூடிவிட்டு, விழுப்புரம் ரயில் நிலையத்தில் செயல்படும் ஆர்.எம்.எஸ். அலுவலகத்துடன் மெர்ஜர் செய்யப்பட உள்ளது. இதற்கான அரசாணை கடந்த 17.10.24ல் தபால் துறையின் சார்பில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும் டிச.,7 ம் தேதி முறைப்படி திண்டிவனத்திலுள்ள அலுவலகத்திற்கு மூடுவிழா நடத்தப் படும் என்று ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.திண்டிவனத்திலுள்ள ஆர்.எம்.எஸ்., அலுவலகம் விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் மாலை 4.15 மணியிலிருந்து இரவு 11.45 மணி வரை செயல்பட்டு வருகின்றது. இந்த அலுவலகத்தில் தபால்களை வாங்குவது, பதிவு தபால்கள் மற்றும் ஸ்பீடு போஸ்ட், ஆகிய சர்வீஸ்கள் நடக்கின்றது. திண்டிவனம் பகுதிகளிலுள்ள மற்ற தபால் நிலையங்கள் மாலை வரை செயல்படுகின்றது. மாலை நேரத்தில் மட்டும் ஆர்.எம்.எஸ்., அலுவலகம் செயல்படுகின்றது .இதேபோல் திண்டிவனம் பகுதிகள் மற்றும் சுற்றியுள்ள வந்தவாசி, ஒலக்கூர், செஞ்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலுள்ள தபால் நிலையங்களிலிருந்து வெளியூர்களுக்கு செல்ல வேண்டிய தபால்கள், பதிவு தபால்கள் உள்ளிட்ட அனைத்தும் திண்டிவனத்திற்கு வாகனங்கள் மூலம் மாலை நேரத்தில் அனுப்பி வைக்கப்படும்.இந்த தபால்கள் ஆர்.எம்.எஸ்., ஊழியர்கள் மூலம் கலெக்ட் செய்யப்பட்டு, திண்டிவனத்திற்கு வரும் தொலை துார ரயில்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். இந்த அளவிற்கு முக்கியத்தும் வாய்ந்த திண்டிவனம் அலுவலகத்தில் 25 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் 10 பேர்களை தவிர, மீதமுள்ள 15 பேர் தற்காலிக பணியாளர்கள். இந்த அலுவலகம் மூடப்படுவதால் தற்காலிக ஊழியர்களின் பணிக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது .தனியார் கூரியர் சர்வீஸ் மற்றும் ஸ்பீடு போஸ்ட் கட்டணத்தை விட ஆர்.எம்.எஸ்.,ல் கட்டணம் குறைவாக இருப்பதால், வழக்கறிஞர்கள், பொது மக்கள், வியாபாரிகள் என பலரும் ஆர்.எம்.எஸ்., அலுவலகத்திற்கு அதிக அளவில் வருகின்றனர். ஏற்கனவே கடந்த 22ம் ஆண்டு திண்டிவனம் ஆர்.எம்.எஸ்., அலுவலகத்தை மூடுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்ட போது, கடும் எதிர்ப்பு காரணமாக மூடுவிழா தள்ளி வைக்கப்பட்டது. திண்டிவனம் ரயில்நிலையத்தில் கடந்த 50 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த ஆர்.எம்.எஸ்., அலுவலகத்தை மூடுவதற்கு, ஆர்.எம்.எஸ்., ஊழியர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர்.திண்டிவனம் மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த அனைத்து தரப்பு மக்களும் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வரும், ஆர்.எம்.எஸ்., அலுவலம் தொடர்ந்து செயல்படுவததற்கு விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் முயற்சி எடுக்க வேண்டும் என்பதே ஒட்டு மொத்த மக்களின் கோரிக்கையாக உள்ளது.