ஊராட்சி துணைத் தலைவரை அழைத்து சென்ற போலீசாரை கண்டித்து மறியல்
வானுார் : கிளியனுார் அருகே டிப்பர் லாரியை மடக்கி கண்ணாடியை உடைத்த புகாரில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ஊராட்சி துணைத்தலைவரை விடுவிக்கக்கோரி பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கிளியனுார் அடுத்த முருக்கம் பகுதியில் உள்ள கல்குவாரியில், இருந்து லாரிகள் மூலம் கருங்கற்கள் சக்கை ஏற்றி செல்லப்படுகிறது. இந்த வாகனங்கள், முருக்கம் பகுதியில் இருந்து கீழ்கூத்தப்பாக்கம் வழியாக சென்று வருகிறது. இவ்வாறு செல்லும் லாரிகளால், பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி, அப்பகுதியை சேர்ந்த ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மூர்த்தி தலைமையில், நேற்று முன்தினம், அவ்வழியாக சென்ற (டிஎன்.25.ஏஆர்.1878) என்ற பதிவெண் கொண்ட டிப்பர் லாரியை, மடக்கி, கண்ணாடியை அடித்து உடைத்துள்ளனர்.இது குறித்து கல்குவாரி உரிமையாளர் வெற்றிவேந்தன், கிளியனுார் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார், டிப்பர் லாரி கண்ணாடியை உடைத்த மூர்த்தியை கைது செய்து, விசாரித்து வந்தனர். இதையறிந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை 8;30 மணிக்கு, புதுச்சேரி - திண்டிவனம் பைபாஸ் சாலையில், கீழ்கூத்தப்பாக்கம் சந்திப்பில், ஒன்று கூடி கிளியனுார் போலீசாரை கண்டித்து மறியலில் ஈடுப்பட்டனர்.அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட நபரை விடுவிப்பதாக உறுதி அளித்தனர். அதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால், சுமார் 10 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.