வீட்டுமனை பட்டா கேட்டு முற்றுகை போராட்டம்
செஞ்சி : வீட்டு மனை பட்டா கேட்டு ஜம்போதி கிராம பொதுமக்கள் செஞ்சி தாசில்தார் அலுவலகம் எதிரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். செஞ்சி அடுத்த ஜம்போதி கிராமத்தில் 120 இந்து ஆதிதிராவிட குடும்பங்களை சேர்ந்தவர்கள் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மூன்று ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இவர்கள் நேற்று அகில இந்திய இந்து மகா சபா மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ் தலைமையில் செஞ்சி தாசில்தார் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.அம்பேத்கர் மக்கள் கட்சி நிறுவனர் மழைமேனி பாண்டியன், முன்னாள் கவுன்சிலர் சக்கரை, வி.சி., மாவட்ட செயலாளர் தனஞ்செழியன், காங்., நகர தலைவர் சூரியமூர்த்தி, பழங்குடி இருளர் முன்னணி மாநில தலைவர் சுடரொளி சுந்தரம் உட்பட பல்வேறு சமூக அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் திண்டிவனம் சப் கலெக்டர் திவ்யான்ஷூ நிகம் பேச்சு வார்த்தை நடத்தினார். ஒரு மாத காலத்தில் வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.