சென்னைக்கு கூடுதல் பஸ்களை இயக்க கோரி திண்டிவனத்தில் மறியல்
விழுப்புரம்: சென்னைக்கு கூடுதலாக பஸ்களை இயக்க கோரி, பயணிகள் திண்டிவனத்தில் மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டிவனம் மேம்பாலம் கீழ் பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நேற்றிரவு 8.30 மணிக்கு சென்னைக்கு செல்லும் பயணிகள் 20க்கும் மேற்பட்டோர் வந்து நின்றனர். வார விடுமுறை முடிந்து ஊருக்கு செல்வோர், நீண்ட நேரம் காத்திருந்தும் சென்னைக்கு போதுமான பஸ் வராததால், ஆத்திரமடைந்த பயணிகள் 9.30 மணிக்கு திடீரென மேம்பாலம் கீழே சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சென்னைக்கு கூடுதலாக பஸ்களை இயக்க வேண்டும் என, வலியுறுத்தினர். திண்டிவனம் டவுன் போலீசார் ு மறியல் செய்த பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின், பயணிகள் சமாதானமாகி, 9.40க்கு அங்கிருந்து களைந்ததோடு, சிறிது நேரத்தில் சென்னை பஸ்கள் வந்தவுடன் அதில் ஏறி சென்றனர். இந்த சம்பவத்தால், திண்டிவனம் - சென்னை மார்க்க சாலையில் 10 நிமிடங்கள் போக்குவரத்து பாதித்தது.