தென்பசியார் - ஜக்காம்பேட்டை மேம்பாலம் பணி: விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை
விக்கிரவாண்டி: தென்பசியார் - ஜக்காம் பேட்டை பகுதியில் கட்டப் ப டும் மேம்பாலம் பணியை விரைந்து முடித்திட 'நகாய்' அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டிவனம், நீதிமன்ற வளாகத்தின் எதிரே தென்பசியார் - ஜக்காம்பேட்டை இடையே விபத்துகளை தவிர்க்க 'நகாய்' மேம்பால கட்ட அமைக்க முடிவு செய்து கடந்த மார்ச் 2023ம் ஆண்டு முண்டியம்பாக்கம், விக்கிரவாண்டி வடக்கு பைபாஸ், தென்பசியார் ஆகிய 3 இடங்களில் மேம்பாலம் அமைக்க 60.78 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. இப்பணியை செய்ய சென்னை, பி.எஸ்.டி., கன்ஸ்ட்ரக் ஷனுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. 2023ம் ஆண்டு இறுதியில் துவக்கப்பட்ட இப்பணியில் முதல் கட்டமாக நீதிமன்ற வளாகம் எதிரே சப்வே அமைக்கும் பணியும், அதன் அருகே தரைப்பாலம் அமைக்கும் பணியும் நடந்து முடிந்தது. தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் மேம்பாலம் அமைக்க தேவையான பார் மண் பற்றாக்குறையாலும் கடந்த பெஞ்சல் புயலின்போது வட மாநிலத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்றவர்கள் மீண்டும் வராத காரணத்தினாலும், துணை ஒப்பந்தம் போன்ற நிர்வாக சிக்கல் காரணமாக பணிகள் நடைபெறாமல் கடந்த ஓராண்டுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. பணி தொடர்ந்து நடைபெறாதது குறித்து 'நகாய்' திட்ட இயக்குநர் வரதராஜன் ஒப்பந்ததாரருக்கு கடந்த மாதம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். கடந்த 20 தினங்களுக்கு முன் ஒப்பந்ததாரர் பதில் அளித்ததைத் தொடர்ந்து, பணியை விரைந்து முடித்திட 'நகாய்' உத்தரவிட்டுள்ளது. மேம்பாலம் பணி நடைபெறும் பகுதியில் சர்வீஸ் சாலையின் இரு புறமும் இரவு நேரங்களில் பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள், போக்குவரத்து நெரிசலில் சிக்கி விபத்து ஏற்பட்டும் விழாக் காலங்களில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கமாகி விட்டது. எனவே, பொதுமக்கள் நலன் கருதியும் விபத்துகளைத் தவிர்க்கவும் ஒப்பந்ததாரர் பணியை விரைந்து முடித்திட 'நகாய்' அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.