உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  புதிய அருங்காட்சியகம் துவங்க கோரிக்கை

 புதிய அருங்காட்சியகம் துவங்க கோரிக்கை

விழுப்புரம்: விழுப்புரத்தில் அரசு அறிவித்தபடி புதிய அருங்காட்சியகம் துவங்குவதற்கான பணியை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. விழுப்புரம் அருங்காட்சியகம் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செங்குட்டுவன் உள்ளிட்டோர், தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு அனுப்பியுள்ள மனு: தொன்மையும், பழமையும் வரலாற்று சிறப்புமிக்க விழுப்புரம் மாவட்டத்தில், அரசு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்பது கால் நுாற்றாண்டை கடந்த கனவாகும். இதனை நினைவாக்கும் வகையில், கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாத பட்ஜெட்டில் 5 கோடி ரூபாய் மதிப்பில் ,விழுப்புரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் எனும் அறிவிப்பு வெளியானது. கோலியனுார் அடுத்த பனங்குப்பத்தில், நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் இடத்தில், மாவட்ட நிர்வாகம், அருங்காட்சியகத்திற்காக பரிந்துரைக்கப்பட்டது. அதனை அருங்காட்சியகங்கள் துறை இயக்குநர் 2023ல் நேரில் பார்வையிட்டு, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தார். அதனைத் தொடர்ந்து, அங்கு அரசு அருங்காட்சியகம் அமைத்திட, அருங்காட்சியகங்கள் துறைக்கு நிலமாற்றம் செய்ய கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் 4ம் தேதி நில நிர்வாக ஆணையருக்கு விழுப்புரம் கலெக்டர் பரிந்துரை செய்தார்.நிரந்தர அருங்காட்சியக பணிகள் தொடங்கி முடியும் வரை விழுப்புரம் நகருக்குள் தற்காலிக அருங்காட்சியகத்தை தொடங்க யோசனையை முன்வைத்தோம். தற்காலிக அருங்காட்சியகம் அமைப்பதற்கு 2,400 சதுரடி அடி வாடகை கட்டடத்தைக் கேட்டு, அருங்காட்சியகங்கள் துறை இயக்குநர், ஆட்சியருக்குக்கும் கடிதம் எழுதினார். அது அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதற்கிடையே பனங்குப்பத்தில் அருங்காட்சியகம் அமைத்திட சுற்றுலா மற்றும் அறநிலையத்துறைக்கு நிலமாற்றம் செய்து, அரசின் முதன்மைச் செயலாளர் கடந்த 2024 செப்டம்பர் 3ம் தேதி ஆணை பிறப்பித்தார். இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டு ஓராண்டுக்கும் மேலாகிவிட்டது. ஆனாலும், விழுப்புரம் அருங்காட்சியகப் பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை.விழுப்புரம் அருங்காட்சியகம் அறிவிப்பு வெளியிடப்பட்டு 4 ஆண்டுகள் ஆகப்போகிறது. இதற்கான இடமும்கூட தயாராக இருக்கிறது. ஆனாலும், பணிகள் எதுவும் தொடங்கப்படாமல் இருப்பது வேதனையளிக்கிறது. இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி