உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கழிவுநீர் குளமாக மாறிய சாலைகள் வழுதரெட்டியில் சுகாதார சீர்கேடு

கழிவுநீர் குளமாக மாறிய சாலைகள் வழுதரெட்டியில் சுகாதார சீர்கேடு

விழுப்புரம் : விழுப்புரம் வழுதரெட்டியில் பாதாள சாக்கடை பணியால் குதறப்பட்ட வீதிகளில் கழிவுநீர் சாலையில் குளம்போல் தேங்கி நிற்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.விழுப்புரம் வழுதரெட்டியில் நுாற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். நகராட்சி சார்பில் அனைத்து தெருக்களிலும், பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்க மேன்ஹோல் மற்றும் குழாய்கள் பதிக்கப்பட்டது. இதற்காக சிமெண்ட் சாலைகள் அனைத்தும் உடைத்து மேன்ஹோல், குழாய்கள் பதித்தனர். குழாய் பதிக்கப்பட்ட பின்பு தோண்டிய பள்ளங்களில் மண் மட்டும் கொட்டி நிரப்பிச் சென்றனர்.மீண்டும் முழுமையாக சிமெண்ட் சாலை அமைக்கவில்லை. இதனால், வழுதரெட்டியில் பல வீதிகள் குண்டும் குழியுமாக குதறி வைத்ததுபோல் கிடக்கிறது. பல வீதிகளில் வடிகால் வாய்க்கால் கிடையாது. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வெளியேற வழியின்றி சாலையில் கழிவுநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது.சிவன் கோவில் தெருவில் வடிகால் வாய்க்கால் இல்லாததால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மாத கணக்கில் தேங்கி நிற்பதால், கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. மாத கணக்கில் தேங்கி நிற்கும் கழிவுநீரில் நடந்து செல்லும் பொதுமக்கள், குழந்தைகளுக்கு தோல் நோய்கள் ஏற்படுகிறது.வழுதரெட்டி முழுதும் சாலைகளில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றி, பாதாள சாக்கடைக்காக தோண்டிய பள்ளங்களை சரிசெய்து வாய்க்கால் வசதியுடன், மீண்டும் சாலை அமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி