மேலும் செய்திகள்
புதுமை பெண் திட்டத்தில் 1,972 மாணவியர் பயன்
31-Dec-2024
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், புதுமை பெண் திட்டத்தின் கீழ் ஏற்கனவே அரசு பள்ளியில் படித்துஉயர்கல்வி பயின்று வரும் மாணவிகளுக்கு ரூ.1,000 ஊக்கத் தொகை வழங்கி வரும் நிலையில்,தற்போது மேலும் 1,248 மாணவிகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் சமூக நலத்துறை சார்பில், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரை தமிழ் வழியில் படித்து உயர்கல்வி பயன்று வரும் மாணவிகளுக்கு, மாதந்தோறும் ரூ.1,000- வழங்கும் புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கத்தை, தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று தூத்துக்குடியில் தொடங்கி வைத்தார்.இதனை தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத்திலும் அத்திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரி கூட்டரங்கில், புதுமைப்பெண் திட்ட விரிவாக்கத்தின் கீழ் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ்வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவியர்களுக்கு ரூ.1,000 ஊக்கத்தொகை பெறும் திட்டம் தொடங்கப்பட்டது.விழாவிற்கு கலெக்டர் பழனி தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.,க்கள் மஸ்தான், லட்சுமணன், மணிக்கண்ணன், சிவக்குமார் ஆகி யோர் முன்னிலை வகித்து, அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ்வழியில் பயின்று, தற்போது உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத்தொகை பெறுவதற்கான வங்கி பற்று அட்டையினை வழங்கினர்.அப்போது கலெக்டர் கூறியதாவது: அரசு பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரை தமிழ்வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000- வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தினை முதல்வர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அரசு உதவி பெறும் பள்ளிகளில், தமிழ்வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவியர்களுக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில், இன்று அத்திட்டம் தொடங்கி, மாணவிகளுக்கு வங்கி பற்று அட்டை வழங்கப்பட்டது.நமது மாவட்டத்தில் முதலில் கடந்த 5.9.2022 முதல் துவங்கப்பட்டது. முதல் கட்டமாக 56 கல்லூரிகளைச் சார்ந்த 4,174 மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். இரண்டாம் கட்டமாக கடந்த 8.2.2023 அன்று தொடங்கி வைக்கப்பட்டு, 72 கல்லூரிகளைச் சார்ந்த 3,138 மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். மூன்றாம் கட்டமாக 62 கல்லூரிகளைச் சார்ந்த 3,282 மாணவிகள் என இந்த மாதம் வரை ரூ.1000 பெற்று வருகின்றனர். இத்திட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் 11,594 மாணவிகள் பயனடைந்துள்ளனர்.தற்போது, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்று உயர் கல்வியில் சேரும் மாணவியர்களுக்கும் மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில், 65 கல்லூரிகளிலிருந்து 1,248 மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வீதம், ரூ.12,48,000 நிதி உதவி வழங்கப்படவுள்ளது. என்று கலெக்டர் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, மாவட்ட ஊராட்சி துணை தலைவர் ஷீலாதேவி சேரன், அரசு சட்டக்கல்லூரி முதல்வர் கிருஷ்ணலீலா, அரசு கலைக் கல்லூரி முதல்வர் சிவக்குமார் உள்ளிட்ட அலுவலர்கள், மாணவிகள் கலந்துகொண்டனர்.
31-Dec-2024