விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாணவர்களுக்கான அறிவியல் மாவட்ட மாநாடு நடந்தது. மாணவர்கள் மத்தியில் அறிவியல் ஆய்வு மனப்பான்மையை உருவாக்கும் நோக்கில், குழந்தைகள் அறிவியல் மாநாடு நடக்கிறது. தமிழகம் முழுவதும் இந்த மாநாட்டிற்கான கருப்பொருளாக நீடித்த நிலையான நீர் பாதுகாப்பு குறித்து, கடந்த 3 மாதங்களாக வழிகாட்டி ஆசிரியர்கள் உதவியோடு மாணவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த மாணவர்கள், ஆய்வு கட்டுரை சமர்பிக்கும் மாநாடு, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் விழுப்புரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில், 20 ஆய்வு கட்டுரைகள் சமர்பிக்கப்பட்டு, மண்டல அளவில் பங்கேற்க நான்கு ஆய்வு கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டன. இந்த கட்டுரைகளை ஆய்வு செய்யும் மதிப்பீட்டாளர்களாக ஆசிரியர்கள் குகன்பசுபதி, சிவமுருகன் ஆகியோர் செயல்பட்டனர். மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) அருள், ஆய்வு கட்டுரைகள் சமர்பித்த மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழும், மண்டல அளவில் பங்கேற்கவுள்ள மாணவர்களுக்கு கேடயம், சான்றிதழ் வழங்கினார். மண்டல அளவில் நடக்கவுள்ள மாநாட்டில், முகையூர் ஒன்றியம், சத்தியகண்டநல்லுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, விழுப்புரம் ஜான்டூயி மெட்ரிக் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். வானவில் மன்ற கருத்தாளர்கள் மணிகண்டன் பிரியா, ஆசிரியை கவுசல்யா ராஜ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியை, பேராசிரியர் பூபதி, அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் சேகர், செயலாளர் பாலமுருகன், நிர்வாகிகள் அய்யனார், தண்டபானி, சுகதேவ், சங்கரநாராயணன், ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார், முருகன், செவ்வந்தி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.