செஞ்சியில் நாளை கடையடைப்பு
செஞ்சி: செஞ்சியில் நாளை அனைத்து சங்கங்கள் சார்பில் கடையடைப்பு மற்றும் டோல்கேட் முற்றுகை போராட்டம் நடக்கிறது.திண்டிவனம் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம் - செஞ்சி இடையே நங்கிலிகொண்டான் கிராம எல்லையில் டோல்கேட் கடந்த நான்கு மாதங்களாக இயங்கி வருகிறது.இந்த டோல்கேட்டை சுற்றி 20 கி.மீ., துாரத்தில் உள்ள அனைத்து ஊர்களைச் சேர்ந்த பொது மக்களுக்கும் இலவச அனுமதி வழங்கக்கோரி சேம்பர் ஆப் காமர்ஸ், வர்த்தகர் சங்கம், நகை வியாபாரிகள் சங்கம், ஆட்டோ, கார், வேன், ஜே.சி.பி., ஓவியர்கள் மற்றும் காய்கனி வியாபாரிகள் என 15க்கும் மேற்பட்ட சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.இது குறித்து தாசில்தார் ஏழுமலை தலைமையில் நடந்த சமாதான கூட்டம் தோல்வியடைந்தது. இதையடுத்து நாளை 23ம் தேதி செஞ்சி மற்றும் சுற்று வட்டார ஊர்களில் கடையடைப்பு செய்து, டோல்கேட்டில் முற்றுகை போராட்டம் நடத்த அனைத்து சங்கங்களும் முடிவு செய்துள்ளனர்.இது குறித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று கடையடைப்பு, முற்றுகை போராட்டத்திற்கு அனுமதி கேட்டு டி.எஸ்.பி., முகாம் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.