கடந்தாண்டைவிட 1,506 எக்டர் சிறுதானிய பயிர் சாகுபடி குறைவு: பருவமழை குறைவால் விவசாயிகள் கவலை
விழுப்புரம்: மாவட்டத்தில் பருவ மழை குறைவால் மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்யாததால், கடந்தாண்டை விட 1,506 எக்டர் சிறுதானிய பயிர் சாகுபடி குறைந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தின் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில், 2 லட்சத்து 80 ஆயிரத்து 72 எக்டர் நிகர சாகுபடி பரப்பாக உள்ளது. மொத்த மக்கள் தொகையில், 3 லட்சத்து, 60 ஆயிரத்து 217 விவசாயிகள் உள்ளனர். இதில், 91 சதவீதம் பேர் சிறு, குறு விவசாயிகளாக உள்ளனர். மாவட்டத்தில் நெல், கரும்பு, வாழை, பயறு வகை உள்ளிட்ட அனைத்து வகையான பயிர்களும் சாகுபடி செய்யப்படுகின்றன. மாவட்டத்தில், 60 சவீதம் விவசாய நிலங்கள், பருவமழையை நம்பியே சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் ஆண்டின் சராசரி மழை அளவாக தென்மேற்கு பருவமழை 356.66 மி.மீ., மற்றும் வடகிழக்கு பருவமழை 638.11 மி.மீ., உள்ளது. கடந்தாண்டு, தென்மேற்கு பருவமழை 479.50 மி.மீ., பெய்தது. இதனை பயன்படுத்தி, காரீப் பருவத்தில் கடந்தாண்டு விவசாயிகள் தங்களின் நிலங்களில் நெல், மணிலா, பருத்தி, உளுந்து உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்தனர். இதில், நெல் 14 ஆயிரத்து 561 எக்டர் மற்றும் கம்பு, தினை உள்ளிட்ட சிறுதானிய வகைகள் 10 ஆயிரத்து320 எக்டர், பயறுவகைகள் 8 எக்டர், கரும்பு 10,734 எக்டர், எண்ணெய்வித்துக்கள் 12,194 எக்டர் என மொத்தம் 48,963 எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டது. இந்தாண்டிற்கான, தென்மேற்கு பருவமழை கடந்த 22ம் தேதி வரை மாவட்டத்தில் 239.83 மி.மீ., பெய்துள்ளது. ஜூன் மாதம் துவங்கும் தென்மேற்கு பருவமழை செப்., மாதம் முடிவடைகிறது. ஆனால், மாவட்டத்தில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை, பருவம் தவறி பெய்தது. மேலும், விவசாய கிணறுகள், ஏரி, குளங்களில் நிலத்தடி நீர் குறைந்து காணப்படுகிறது. இதனால், வானம் பார்த்த பூமியான மானாவாரி நிலங்களில் காரீப் பருவத்தில் பயிர் சாகுபடி குறைந்துவிட்டது. கடந்தாண்டு 9 ஆயிரத்து 142 எக்டர் சாகுபடி செய்யப்பட்ட கம்பு, இந்தாண்டு 6 ஆயிரத்து 523 எக்டராகவும், 218 எக்டர் சாகுபடி செய்யப்பட்ட கேழ்வரகு 113 எக்டராகவும், 372 எக்டர் சாகுபடி செய்யப்பட்ட தினை 252 எக்டராகவும் என மொத்தம் கடந்த ஆண்டைவிட 1,506 எக்டர் சிறுதானிய பயிர்களின் சாகுபடி இந்தாண்டு குறைந்துள்ளது. இதேபோன்று, கடந்தாண்டு 10 ஆயிரத்து 734 எக்டராக இருந்த கரும்பு சாகுபடி இந்தாண்டு 8 ஆயிரத்து 427 எக்டராகவும், 1,277 எக்டராக இருந்த எள் சாகுபடி 1,171 எக்டராகவும் குறைந்துள்ளது. இதில், கடந்தாண்டு 14,561 எக்டராக இருந்த நெல் சாகுபடி இந்தாண்டு 19 ஆயிரத்து 96 எக்டராகவும், 12 ஆயிரத்து 195 எக்டராக இருந்த எண்ணெய்வித்துக்கள் சாகுபடி 12 ஆயிரத்து 691 எக்டராகவும் அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் போதிய அளவிற்கு தென்மேற்கு பருவமழை பெய்யாததால் காரீப் பருவத்தில் மானாவாரி நிலங்களில் பயிர் சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்