மேலும் செய்திகள்
தரமற்ற விதை விற்பனை செய்தால் நடவடிக்கை
16-Sep-2025
விழுப்புரம்: விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் மாவட்டங்களில் சிறப்பு விதை ஆய்வு குழுவினர், விதை விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு செய்தனர். விதை சான்றளிப்பு இயக்குநரின் உத்தரவின் பேரில், திருச்சி, விதை ஆய்வு துணை இயக்குநர் கண்ணன் தலைமையில் விதை ஆய்வாளர்கள் சிறப்பு குழுவினர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் மாவட்டங்களில் செயல்படும் விதை விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு செய்தனர். வேளாண் விரிவாக்க மையங்கள், அரசு விதை சுத்திகரிப்பு நிலையம், அரசு விதைப்பண்ணை மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்கள் உட்பட 48 விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்தனர். விதை விற்பனை நிலையங்களில் இருப்பில் இருந்த விதை குவியல்களில் இருந்து நெல், வீரிய மக்காச்சோளம், உளுந்து, பருத்தி பயிர்களில் இருந்து 38 விதை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அதன் தரம் உறுதி செய்ய, விழுப்புரம், கடலுாரில் உள்ள விதை பரிசோதனை நிலையத்திற்கு ஆய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டது. தனியார் விதை விற்பனை நிலையங்களில் 8 விதை குவியல்களில் உரிய ஆவணங்கள் பராமரிக்கப்படாததால், 3 லட்சத்து 82 ஆயிரத்து 970 மதிப்பீட்டில் 7,065 கிலோ விதைகள் விற்பனை செய்ய உரிய விதை சட்ட விதிகளின்படி, தடை விதித்தனர். மேலும், விதை சட்டத்தை கடைபிடிக்காத இரண்டு விதை விற்பனை நிலையங்களுக்கு விற்பனை உரிமம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. விதை ஆய்வு துணை இயக்குநர் சரவணன், விதை ஆய்வாளர்கள் ஜோதிமணி, நடராஜன், செந்தில்குமார், தமிழ்பிரியன் உடனிருந்தனர்.
16-Sep-2025