மாணவர்களுக்கு ஸ்டாலின் ஆட்சி பொற்காலம்: மஸ்தான் எம்.எல்.ஏ., பெருமிதம்
செஞ்சி; 'செஞ்சி தொகுதி மாணவர்களுக்கு ஸ்டாலின் ஆட்சி பொற்கால ஆட்சி' என மஸ்தான் எம்.எல்.ஏ., பேசினார்.செஞ்சி ஒன்றிய அலுவலகத்தில் வீடு கட்டும் திட்ட பயனாளிகள் 33 பேருக்கு உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். பி.டி.ஓ.,க்கள் நடராஜன், பிரபா சங்கர் முன்னிலை வகித்தனர். மேலாளர் பழனி வரவேற்றார்.மஸ்தான் எம்.எல்.ஏ., உத்தரவுகளை வழங்கி பேசியதாவது:செஞ்சியில் 40 ஆண்டாக கலைக்கல்லுாரி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்த முறை முதல் அமைச்சர் ஸ்டாலின் நிறைவேற்றி விட்டார். கல்லுாரிக்கு புதிய கட்டடம் விரைவில் திறக்கப்படும்.திண்டிவனம் சிப்காட்டில் 20 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகியுள்ளது. வேலைக்கு அடிப்படை தகுதியாக தொழிற் பயிற்சி படிப்பு தேவைபடுகிறது.செஞ்சி, மரக்காணத்தில் தொழிற் பயிற்சி பள்ளி இல்லை என 3 மாதங்களுக்கு முன் விழுப்புரம் வந்த முதல்வர் ஸ்டாலினிடம் தெரிவித்தேன். கோரிக்கையை ஏற்று அன்றே ஒப்புதல் வழங்கினார். இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. விரைவில் புதிய இடம் தேர்வு செய்து கட்டடம் கட்டப்படும். அதே போல் செஞ்சியில் அறிவு சார் மையம் வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று ஒப்புதல் வழங்கியுள்ளார். மேல்களவாய் ரோட்டில் விரைவில் அடிக்கல் நாட்டபட உள்ளது. இதன் மூலம் மாணவர்கள் போட்டி தேர்வுகளில் பங்கேற்க முடியும். முதல்வர் ஸ்டாலின் ஆட்சி செஞ்சி தொகுதி மாணவர்களுக்கு பொற்கால ஆட்சியாக உள்ளது.இவ்வாறு மஸ்தான் பேசினார். ஒன்றிய கவுன்சிலர் கேமல், ஊராட்சி தலைவர்கள் சங்கத் தலைவர் ரவி மற்றும் ஒன்றிய அலுவலர்கள் பங்கேற்றனர்.