உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கல்வி சேவையில் மாணவர்களின் நம்பிக்கை தலைமை ஆசிரியருக்கு குவியும் பாராட்டு

கல்வி சேவையில் மாணவர்களின் நம்பிக்கை தலைமை ஆசிரியருக்கு குவியும் பாராட்டு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அரசு மேல்நிலை பள்ளியில் மாணவர்கள் நல்லொழுக்கத்தை கடைபிடிக்க தலைமை ஆசிரியர் சேவியர் சந்திரகுமார் கல்வி சேவையால், சிறந்த ஆசிரியராக அங்குள்ள மாணவர்கள், பெற்றோர் மத்தியில் திகழ்ந்து வருகிறார். கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை சேர்ந்தவர் சேவியர் சந்திரகுமார்,59; இவர் கடந்த, 1990ம் ஆண்டு, விழுப்புரத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் இயற்பியல் ஆசிரியராக, தனது பணியை துவக்கினார். இதையடுத்து கடந்த, 1997 ம் ஆண்டு சேவியர் சந்திரகுமார், அரசு பணியாக கரசானுார் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் ஆசிரியராக சேர்ந்தார். கடந்த, 2016ம் ஆண்டு இவர், மரக்காணம் அருகே நடுக்குப்பம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் பணிபுரிந்தார். தொடர்ந்து. வ.பகண்டை அரசு பள்ளியிலும், கடந்த, 2018 ம் ஆண்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு நேர்முக உதவியாளராக பணியில் சேர்ந்தார். இங்கு இவர், லஞ்சம் வாங்குவதும், தருவதும் தவறு என்ற வாசகத்தை தனது அலுவலக அறையில் வைத்திருந்தார். இவர், பணிபுரிந்த அனைத்து பள்ளிகளிலும் 99 முதல் 100 சதவீதம் வரை இயற்பியல் பாடத்தில் மாணவர்களுக்கு தேர்ச்சியை பெற்று தந்தார். கடந்த 2021ம் ஆண்டு, சேவியர் சந்திரகுமார் கண்டமங்கலம் அரசு மேல்நிலை பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியில் சேர்ந்தார். இவர், இந்த பள்ளிக்கு வரும் போது, பள்ளி வளாகத்தில் சுற்றுச்சுவர் இல்லை. மாணவர்கள் பல பிரச்னையில் கல்வியில் கவனம் செலுத்தாமல் இருந்தனர். இதை கவனத்தில் கொண்ட அவர் மாணவர்களின் கஷ்டங்களை புரிந்து கொண்டு முடிந்தவரை அதை தீர்த்து வைத்து, அவர்கள் படிப்பில் மட்டும் கவனத்தை செலுத்தும் நிலைக்கு கொண்டு வர அவர்களின் வீடுகளுக்கு சென்று கல்வியை போதித்தார். பள்ளி வளாகத்தில் சுற்றுச்சுவர் கட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனுமதி பெற்று புதிய சுற்றுச்சுவற்றை கட்டி, அதில் மாணவர்கள் எப்படி இருக்க வேண்டும், பெற்றோருக்கு மரியாதை தருதல் குறித்த விழிப்புணர்வு விளம்பரங்களை தீட்டுவதற்கு ஏற்பாடுகளை செய்தார். முக்கியமாக இந்த பள்ளியில் மாணவர்கள், சிலர் கஞ்சா போதையின் பிடியில் இருந்தனர். அவர்களை தலைமை ஆசிரியர் தனது நண்பரான டாக்டர் ஒருவரிடம் இணைந்து திருத்தினார். அவர்கள் தற்போது கல்லுாரியில் எம்.பி.ஏ., பி.இ., போன்ற படிப்புகளை பயின்று வருகின்றனர். மாணவர்கள் ஒழுக்கத்தை கடைபிடிக்கும் வகையில், அவர்களின் 'புள்ளிங்கோ' கட்டிங்கை கண்டு, தலைமை ஆசிரியர் சேவியர் சந்திரகுமார் தானே கத்தரிக்கோள் மூலம் மாணவர்களின் முடியை வெட்டி, ஒழுங்குபடுத்தினார். இவரின் சேவையை பாராட்டி, கல்வித்துறை மூலம் சிறந்த ஆசிரியர் விருது வழங்கப்பட்டது. தனியார் நிறுவனம் மூலமும் இவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது வரை தலைமை ஆசிரியர் சேவியர் சந்திரகுமாருக்கு, நல்லாசிரியர் விருது கிடைக்காமல் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், சேவியர் சந்திரகுமார், அரசு தனக்கு நல்லாசிரியர் விருது வழங்கவில்லை என்றாலும், மாணவர்கள், பெற்றோர், எப்போதோ தனக்கு நல்ல ஆசிரியர் என்ற விருதை வழங்கி விட்டதாக பெருமிதத்தோடு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை