உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மர்ம விலங்கு கடித்து ஆடுகள் தொடர் பலி கூண்டு வைத்து பிடிக்கும் பணி தீவிரம்

மர்ம விலங்கு கடித்து ஆடுகள் தொடர் பலி கூண்டு வைத்து பிடிக்கும் பணி தீவிரம்

செஞ்சி: மர்ம விலங்கு கடித்து ஆடுகள் பலியாவது தொடர்கதையாக உள்ளதால், வனத்துறையில் கூண்டு வைத்து அதை பிடிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த கொங்கரப்பட்டு கிராமத்தில் கடந்த ஜூன், 27ம் தேதி இரவு மர்ம விலங்கு கடித்ததில் லோகநாதன் என்பவரின், 3 வெள்ளாடுகளும், கன்று குட்டியும், சுமித்ரா, சுப்ரமணி ஆகியோரின் தலா ஒரு கன்று குட்டியும் இறந்தன. அதே ஊரில் கடந்த, 3ம் தேதி இரவு கோபால் என்பவரின் கன்றுக்குட்டி, மர்ம விலங்கு தாக்கியதில் இறந்தது. கடந்த, 4ம் தேதி இரவு காட்டுப்பன்றி ஒன்று ஏரி அருகே இறந்து கிடந்தது. தொடர்ந்து இரவு 8:00 மணிக்கு, கொங்கரப்பட்டை அடுத்துள்ள ரெட்டணை கிராமத்தில் விவசாயி ஒருவரின் 2 ஆடுகள் மர்ம விலங்கு கடித்து இறந்தன.நேற்று அதிகாலை அவியூர் கிராமத்தில் மர்ம விலங்கு கடித்து 3 ஆடுகள் இறந்தன. இதையடுத்து செஞ்சி, திண்டிவனம் வனத்துறையினர் உஷார் அடைந்துள்ளனர். மர்ம விலங்கின் கால்தடத்தை பதிவு செய்து என்ன விலங்கு என்பதை ஆய்வு செய்து வருகின்றனர்.ரெட்டணை கிராமத்தில் கண்காணிப்பு கேமிரா பொருத்தி மர்ம விலங்கு நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் அவியூர் கிராமத்தில் மர்ம விலங்கை பிடிக்க நேற்று மாலை செஞ்சி வனச்சரகர் பழனிச்சாமி தலைமையிலான குழுவினர் மர்ம விலங்கை பிடிக்க கூண்டுகளை வைத்து, அங்கேயே தங்கி உள்ளனர். மேலும், அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ