பகுதி நேர ரேஷன் கடையை திறக்க திண்டிவனம் எம். எல்.ஏ., கோரிக்கை
திண்டிவனம்: தானகுப்பம், கீழ்ஆதனுார் கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடையை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திண்டிவனம் எம்.எல்.ஏ.,அர்ஜூனன் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னையில், கூட்டுறவு மற்றும் உணவு பொருள் வழங்கல்துறை கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணனை கடந்த செப்.3ம் தேதி நேரில் சந்தித்து, திண்டிவனம் வட்டம், ஓங்கூர் கிராமத்தில் இயங்கி வரும் ரேஷன் கடைக்கு, ஐந்து கிலோ மீட்டர் துாரத்திலுள்ள தானகுப்பம் கிராம மக்கள் பொருட்கள் வாங்க வருகின்றனர். தினக்கூலி, ஏழை மக்கள் நீண்ட துாரம் வருவதை கருத்தில் கொண்டு, தானங்குப்பத்தில் பகுதி நேர ரேஷன் கடையை அமைத்த தரவேண்டும். அதே போல் கீழ்ஆதனூர் கிராமத்தில் இயங்கி வந்த ரேஷன் கடை கடந்த காலத்தில் கீழ் ஆதனூர் காலனி பகுதிக்கு மாற்றப்பட்டது. இதனால் கீழ்ஆதனுார் கிராம மக்கள் தொலை துாரத்தில் செல்வற்கு சிரமப்படுகின்றனர். இதை கருத்தில் கொண்டு, கீழ்ஆதனுார் கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை அமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். கோரிக்கை வைத்து மூன்று மாதங்களாகியும், இதுவரை நிறை வேற்றித்தரவில்லை. இரண்டு கோரிக்கையை விரைவில் நிறைவேற்றித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியுள்ளார்.