கண்டமங்கலம் அருகே மணல் திருட்டு வழக்கில் டிப்பர் லாரி, ஜே.சி.பி., பறிமுதல்
கண்டமங்கலம்: கண்டமங்கலம் அருகே சங்கராபரணி ஆற்றில் மணல் திருட்டு வழக்கில் டிப்பர் லாரி மற்றும் ஜே.சி.பி., இயந்திரத்தை பறிமுதல் செய்து, தப்பியோடிய டிரைவர்கள் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.கண்டமங்கலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பக்கிரிப்பாளையம் அருகே சங்கராபரணி ஆற்றில் மணல் திருட்டு நடப்பதாக வந்த ரகசிய தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ராஜேந்திரன் என்பவரின் சூளைக்கு அருகே சென்றபோது ஆற்றில் டிப்பர் லாரியில், ஜே.சி.பி., மூலம் மணல் திருட்டு நடப்பது தெரியவந்தது. போலீசாரைக் கண்டதும் டிரைவர்கள் தப்பியோடிவிட்டனர். இதையடுத்து போலீசார் அங்கிருந்த மணல் ஏற்றிய டிப்பர் லாரி மற்றும் ஜே.சி.பி., இயந்திரத்தை பறிமுதல் செய்தனர்.இது குறித்து சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய 2 டிரைவர்களை தேடிவருகின்றனர்.