உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரத்தில் நுாற்றாண்டை நோக்கி... தனியார் பள்ளிக்கு இணையாக அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளி

விழுப்புரத்தில் நுாற்றாண்டை நோக்கி... தனியார் பள்ளிக்கு இணையாக அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளி

விழுப்புரம் திரு.வி.க., வீதியில் உள்ள அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளி, நுாற்றாண்டை நோக்கி தனியார் பள்ளிகளுக்கு ஈடாக செயல்பட்டு வருகிறது.இப்பள்ளியில், நகரம் மட்டுமின்றி சுற்றுப்புற 50 கிராமங்களைச் சேர்ந்த மாணவியர் படித்து வருகின்றனர். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஆசிரியர் பயிற்சி பள்ளியாக தொடங்கப்பட்டது.பிறகு இப்பள்ளி, கடந்த 1946ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி மகளிர் உயர்நிலைப் பள்ளியாக தொடங்கப்பட்டது. பிறகு 1978ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி மகளிர் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.தற்போது, தனியார் பள்ளிகளுக்கு ஈடாக புதிய தொழில் நுட்ப வசதிகளுடன் 2019-20ம் கல்வியாண்டில் அரசு மாதிரி பள்ளியாக தேர்வு செய்யப்பட்டு, தலைமை ஆசிரியர் மற்றும் 99 ஆசிரியர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், தொழிற் கல்வி பயிற்றுனர்கள் என 120 பேர் பணியாற்றி வருகின்றனர்.இப்பள்ளியில் மழலையர் ஆங்கில வழி பள்ளி (எல்.கே.ஜி.,) கடந்த 2019-20ம் ஆண்டில் தொடங்கப்பட்டு, 300 மாணவ, மாணவியர்களுடன் 5ம் வகுப்பு வரை இயங்குகிறது.

உயர்தொழில் நுட்ப கம்ப்யூட்டர் லேப்

உயர்தொழில் நுட்ப கணினி ஆய்வகம் இயங்குகிறது. 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாணவர்களின் கற்றலை மேம்படுத்த, இணைய வசதிகளுடன் கூடிய 21 கம்ப்யூட்டர்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் உள்ளன.மேலும், ரோபாட்டிக் ஆய்வகம் இயங்குகிறது. இந்த ஆய்வகத்தில் லேப்டாப்கள், 3டி பிரிண்டர்கள், ஆளில்லாத விமானம், ஆளில்லாத வாகனம், இயந்திரவியல் தொழில் நுட்பம், செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பங்களை மாணவிகளுக்கு கற்பிக்கும் வகையில் சாதனங்கள் உள்ளன.

ஸ்மார்ட் கிளாஸ் ரூம்கள்

மெய்நிகர் கணினி வழி வகுப்பறைகள் (ஸ்மார்ட் விர்சுவல் கிளாஸ்) கொண்ட தனி சிறப்புகொண்ட பள்ளியாக உள்ளது. 6 முதல் பிளஸ் 2 வரை மாணவிகளின் கற்றலை மேம்படுத்த, தமிழ்நாடு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தால் இந்த வகுப்பறைகள் செயல்படுத்தப்படுகிறது.எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை உள்ள அனைத்து மாணவியர்களுக்கும் தமிழ், ஆங்கில பாடல்கள், இசை மற்றும் அனிமேஷன் காட்சிகளுடன், அறிவியல் சார்ந்த படங்களும், 3டி பட காட்சிகளுடன் கற்பிக்கப்படுகிறது.மாணவியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, இரண்டு வளாகங்களிலும் 75 சி.சி.டி.வி., கேமராக்கள் பொறுத்தி கண்காணிக்கப்படுகிறது.விளைாயாட்டிற்கொன இரண்டு வளாகங்களிலும் தனியாக மைதானங்கள் உள்ளன. கூடை பந்து, இறகு பந்து, ஷாட்புட், டேபிள் டென்னிஸ், வாலிபால் விளையாட்டுக்கு தனி தளங்களும் அமைக்கப்பட்டுள்ளது.

பழமை மாறாத கட்டடம்

இப்பள்ளி வளாகத்தில், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட நுாற்றாண்டைக் கடந்த பழைமையான கட்டடம், மாவட்டத்தின் அடையாளமாகவும், பள்ளிக்கும் சிறப்பும், பெருமையும் சேர்த்து வருகிறது. தொடக்க காலத்தில் இக்கட்டடம் ஆசிரியர் பயற்சி பள்ளியாக இருந்தது. மகளிர் மேல்நிலைப் பள்ளியாக மாறியவுடன், இக்கட்டடம் நுாலக கட்டடமாக மாற்றப்பட்டு, 5,000க்கும் மேற்பட்ட புத்தகங்களுடன், பள்ளியின் நுாலகமாக இயங்கி வருகிறது.

சிறப்பு நுழைவு தேர்வு வகுப்புகள்

இப்பள்ளியில் நீட் தகுதி நுழைவு தேர்வுக்கான பயிற்சி வழங்கப்படுகிறது. அதில், ஆண்டு தோறும் 40 மாணவிகள் வரை படித்து வருகின்றனர். ஜே.இ.இ., பயிற்சி, சி.ஏ., பயிற்சியில் 100 மாணவிகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. தலைமை ஆசிரியர் கு.சசிகலா தலைமையிலான ஆசிரியர்கள் குழு மூலம், பள்ளி நிர்வாகம் சிறப்பாக இயங்கி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை