உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ரயில்வே மேம்பாலம் சந்திப்பில் தொடரும் போக்குவரத்து நெரிசல்

ரயில்வே மேம்பாலம் சந்திப்பில் தொடரும் போக்குவரத்து நெரிசல்

விழுப்புரம்: விழுப்புரம் ரயில்வே மேம்பாலம் சந்திப்பில், தொடரும் போக்குவரத்து நெரிசலை தடுக்க, கோரிக்கை எழுந்துள்ளது. விழுப்புரம் நகரின் மையத்தில் செல்லும் நேருஜி சாலையில், உள்ளூர் வாகனங்களுடன், புதுச்சேரி, கடலுார், கும்பகோணம் மார்க்க வாகனங்களும் செல்வதால், நகரில் நெரிசல் தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக, நேருஜி சாலையில் ரயில்வே மேம்பாலம் சந்திப்பு பகுதியில் ரயில் நிலையம், உழவர் சந்தை, வங்கிகள், வணிக வளாகங்கள் போன்றவை உள்ளதால், அதிக வாகனங்களும், பொது மக்கள் நடமாட்டமும் அதிகரித்து வருகிறது. மேம்பாலத்தின் கீழ் பகுதியில், ரயில் நிலைய பஸ் நிறுத்தமும் இருப்பதால், புதுச்சேரி, கடலுார் மார்க்க வாகனங்கள் வந்து நிற்கின்றன. அப்போது, முன்னால் மற்றும் பின்னால் வரும் வாகனங்கள் அணிவகுத்து நின்று அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. தினசரி காலை, மாலை பள்ளி, கல்லுாரி அலுவல் நேரங்களில், அதிக வாகனங்கள் வரத்தும், இருபுறமும் பஸ்கள் நிறுத்தமும், ஷேர் ஆட்டோக்களும் அணிவகுத்து நிற்பதாலும், கடும் நெரிசல் உண்டாகி வருகிறது. அங்குள்ள பஸ் நிறுத்த வலதுபுறத்தில், நீண்டகாலத்துக்கு முன்பு அமைக்கப்பட்ட மின்சார டிரான்ஸ்பார்மர் சாலையை ஆக்கிரமித்துள்ளது. அதனை சுற்றிலும் ஷேர் ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதாலும், பஸ்கள் நின்று பயணிகளை இறக்கி, ஏற்றுவதாலும் தினசரி நெரிசல் முடிவுக்கு வராமல் உள்ளது. அந்த இடத்தில் டாஸ்மாக் மதுக்கடையும் இருப்பதால் மேலும் நெரிசல் நிலை தொடர்கிறது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'அங்குள்ள ஆக்கிரமிப்புகள், டாஸ்மாக் மதுக்கடையை அகற்றி போக்குவரத்து நெரிசல் நெருக்கடியை தடுக்க வேண்டும். இதுகுறித்து சம்மந்தப்பட்ட போலீசார் உள்ளிட்டோர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை