உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து... நெரிசல்: விழுப்புரம் போலீஸ் நடவடிக்கை எடுக்குமா?

தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து... நெரிசல்: விழுப்புரம் போலீஸ் நடவடிக்கை எடுக்குமா?

விழுப்புரம்: சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், விழுப்புரம் புறவழிச்சாலை அருகே இரவு நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க காவல்துறையினர் மாற்று ஏற்பாட்டினை மேற்கொள்ள வேண்டும். சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்வதற்கு நுாற்றுக்கணக்கான ஆம்னி பஸ்கள் தினந்தோறும் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் அனைத்தும் விழுப்புரம் பை-பாஸ் சாலை (புறநகர் பகுதியில்) அருகே நிறுத்தப்பட்டு, பயணிகளை இறக்கிவிடப்படுகின்றனர். குறிப்பாக சென்னையில் இருந்து திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, மதுரை, கோவை , திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட முக்கிய ஊர்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்கள், விழுப்புரம் முத்தாம்பாளையம் மேம்பாலம் அமைக்கப்படும் பகுதியில் உள்ள சர்வீஸ் சாலையில் நின்று, பயணிகளை இறக்கிவிடுகின்றனர். இதனால், அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இரவு நேரத்தில் விழுப்புரம் நகர பகுதிக்கு செல்லும் பஸ் பயணிகள் மிகுந்த அவதிப்படுகின்றனர். இப்பகுதியில் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்களும், சென்னை நோக்கி செல்லும் ஆம்னி பஸ் மற்றும் போக்குவரத்து கழக பஸ்கள் சாலையிலேயே நிறுத்தி, பயணிகளை ஏற்றி, இறக்குவதால், அந்த வழியே செல்லும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. இப்பிரச்னையை தீர்க்க, மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறையும் இணைந்து உரிய மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். முத்தாம்பாளையம் சர்வீஸ் சாலையில் ஆம்னி பஸ்கள் நிறுத்துவதை தவிர்த்து, விழுப்புரம் புறவழிச் சாலையில் கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு பின்புறம் உள்ள எல்லீஸ்சத்திரம் மேம்பாலத்திற்கு கீழே உள்ள சர்வீஸ் சாலையை பயன்படுத்திட ஏற்பாடு செய்யலாம். இப்பகுதியில், ஆம்னி பஸ்களை சர்வீஸ் சாலையில் நிறுத்துவதால், தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும். அப்பகுதியில் திருச்சி மார்க்கம், சென்னை மார்க்கமாக செல்லும் பஸ்கள் மற்றும் கார்கள் மேம்பாலத்தின் மீது செல்வதால், பாதுகாப்பான முறையில் ஆம்னி பஸ்களை நிறுத்தலாம். எவ்வித விபத்து அச்சமின்றி ஆம்னி பஸ்சுக்காக வரும் பயணிகள் காத்திருக்கலாம். நகரத்தின் மையப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள இடத்தில், ஆம்னி பஸ்களை நிறுத்த உரிய ஏற்பாடுகள் எடுக்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை விழுப்புரம் மாவட்ட நிர்வாகமும், மாவட்ட காவல் துறையும் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேசிய நெடுஞ்சாலையை கடப்பதை தவிர்க்கலாமே ?

விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து சென்னை மார்க்கமாக தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் செல்கின்றன. சென்னை, திண்டி வனம், செஞ்சி, திருவ ண்ணாமலை மார்க்கமாக செல்கின்ற பஸ்கள், எல்லீஸ் சத்திரம் சாலை மேம்பாலத்தின் வழியாக திருப்பிவிட மாற்று ஏற்பாடு செய்யலாம். இதன் மூலம் முத்தாம்பாளையம் மேம்பாலப் பணிகள் நடைபெறும் இடத்தில் ஏற்படும் வாகன நெரிசலை தவிர்க்கலாம். இங்கு, சென்னை மார்க்கமாக செல்லும் வாகனங்கள், தேசிய நெடுஞ்சாலையை அபாயகரமாக கடக்க வேண்டிய நிலை தவிர்க்கப்படும். இந்த மாற்று ஏற்பாடு குறித்த சாத்தியக் கூறுகளை, காவல்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ