உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தரமற்ற உணவால் ரயில் பயணிகள் பாதிக்கும் அபாயம்! உரிமம் பெறாதவர்கள் அத்துமீறி வியாபாரம்

தரமற்ற உணவால் ரயில் பயணிகள் பாதிக்கும் அபாயம்! உரிமம் பெறாதவர்கள் அத்துமீறி வியாபாரம்

விழுப்புரம்: விழுப்புரம் ரயில் நிலையத்தில் உரிமம் பெறாத வெளி வியாபாரிகள் உணவுபொருட்கள் தரமின்றி விற்பனை செய்யப்படுவதால் பயணிகளுக்கு சுகாதார சீர்கேடுஏற்படுவதோடு, உரிமம் பெற்ற வியபாாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தெற்கு ரயில்வே வாரியம் மூலம் தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு உணவு பொட்டலங்கள், பொருட்களை விநியோகம் செய்வதற்கு டெண்டர் விடப்பட்டு வியாபாரிகளுக்கு, ரயில்வே கேட்டரிங் சர்வீசுக்கான உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்த உரிமம் பெற வியாபாரிகள் 15 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை கடைகளுக்கு ஏற்றபடி, கட்டணம் செலுத்தி பெற்றுள்ளனர். தமிழகத்தில் உள்ள தென், வட மாவட்ட பயணிகளை இணைக்கும் முக்கிய ரயில் நிலையமான விழுப்புரத்தில், உரிமம் பெறாத வெளி வியாபாரிகள் கடந்த சில மாதங்களாக உணவு பொருட்கள் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். ரயில் வரும் நேரங்களில் சரியாக உள்ளே வரும் வெளி வியாபாரிகளிடம் பணிபுரியும் ஊழியர்கள் உணவு பொட்டலங்கள், திண்பண்டங்களை விற்கின்றனர். இதுபோன்று, வெளி வியாபாரிகள் மூலம் விற்கப்படும் உணவு பொருட்களை வாங்கி சாப்பிடும் பயணிகள் சிலருக்கு, கடந்த சில தினங்களுக்கு முன் உடல் உபாதை ஏற்பட்டு வாந்தி எடுத்துள்ளனர். உடனடியாக ரயில்வே டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு, மாத்திரைகள் வழங்கி, பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர். இது பற்றி உரிமம் பெற்ற வியாபாரிகள் ரயில்வே போலீசாரிடம் பல முறை புகார் தெரிவித்தும் அவர்கள் கண்டுகொள்வதில்லை என குற்றம் சாட்டுகின்றனர். இதனால், உரிமம் பெற்றும் வியாபாரம் செய்ய முடியாமல் வியாபாரிகள் புலம்புகின்றனர். வெளியே உள்ள வியபாரிகள், போலீசாரை மட்டுமின்றி, ரயில்வே அலுவலர்களையும் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் வைத்து கொண்டு தங்களின் உணவு பொருட்களை பயணிகளுக்கு விற்றுச் செல்கின்றனர். இந்த உணவின் தரம், காலாவதி தேதி எதையும் பயணிகள் பார்க்காமல் ரயில்களில் செல்லும் அவசர கதியில் உட்கொண்டு உடல் உபாதைக்கு ஆளாகின்றனர். ரயில் நிலையத்தை மட்டும் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ளும் ரயில்வே உயர் அதிகாரிகள், இங்குள்ள உணவு பண்டங்கள் விற்பனை செய்வோரின் நிலையையும் ஆய்வு செய்வதற்கு முன்வர வேண்டும். பயணிகளின் பாதுகாப்பை கருதி, ரயில்வே அதிகாரிகள், இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை