உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வளவனூர் பேரூராட்சி திட்ட பணிகள்: கலெக்டர் உத்தரவு

வளவனூர் பேரூராட்சி திட்ட பணிகள்: கலெக்டர் உத்தரவு

விழுப்புரம் : வளவனுார் பேரூராட்சியில் அரசு திட்டப்பணிகளை துரிதமாக முடிக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் அருகே வளவனுார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்து வரும் புதிய கட்டட கட்டுமான பணியை கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து, வளவனுார் பேரூராட்சிக்குட்பட்ட பாலாஜி நகரில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி கட்டுமானப்பணி, அய்யங்குளம் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்தும் பணியை அவர் பார்வையிட்டார்.இது குறித்து அவர் கூறியதாவது: வளவனுார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.2.59 கோடி மதிப்பில் 3 தளங்களாக 11 வகுப்பறைகள் கட்டப்பட்டு வருகிறது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.வளவனுார் பேரூராட்சியில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.16.5 கோடி மதிப்பீட்டில், 3179 குடியிருப்பு வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள் நடந்து வருகின்றன. டி.பாலாஜி நகர் பகுதியில் ரூ.48 லட்சம் மதிப்பீட்டில், 1.50 லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு வருகிறது. இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மூலம் 14 மற்றும் 15 வது வார்டு பகுதிகளில் வசிக்கும் 450 வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் பணிகளும் நடக்கிறது. மேலும், வளவனூர் பேரூராட்சிக்குட்பட்ட பக்கமேடு பாதை பகுதியில் அய்யங்குளத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் திட்டத்தின் கீழ் ரூ.37 லட்சம் மதிப்பீட்டில் குளத்தினை துார்வாரி சுற்றுச்சுவர் மற்றும் படிக்கட்டுகள் அமைக்கும் பணி ஆய்வு செய்யப்பட்டது. பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த நிகழ்வில், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் பாலாஜி, வளவனுார் பேரூராட்சி செயல் அலுவலர் அண்ணாதுரை உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி