வரிவிதிப்பு எண் வழங்க லஞ்சம் விழுப்புரம் பில் கலெக்டர் கைது
விழுப்புரம் : விழுப்புரத்தில் காலி மனைக்கு வரிவிதிப்பு எண் உருவாக்கி தர ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நகராட்சி வருவாய் உதவியாளரை போலீசார் கைது செய்தனர்.திருவள்ளூரை சேர்ந்தவர் கஜபதி மகன் இளங்கோவன்,43; சென்னையில் மேன்ஷன் நடத்தி வருகிறார். இவர், கடந்த ஆக., 8ம் தேதி விழுப்புரம் மகாராஜபுரம் பகுதியில் 1,587 சதுரடி காலிமனை வாங்கினார். இதற்கு வரி விதிப்பு எண் உருவாக்கி தர, விழுப்புரம் நகராட்சி, பில் கலெக்டரான வருவாய் உதவியாளர் வண்டிமேடு பகுதியை சேர்ந்த குணா,49; என்பவரை அணுகினார். அதற்கு குணா, ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.இளங்கோவன், இது பற்றி விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் நேற்று முன்தினம் புகார் அளித்தார். போலீசார் கூறிய அறிவுரைப்படி நேற்று காலை 10:30 மணிக்கு, இளங்கோவன் மகாராஜபுரம் சென்று, குணாவிடம் லஞ்ச பணத்தை வழங்கினார். அங்கு மறைந்திருந்த விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., அழகேசன், இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் சக்கரபாணி மற்றும் போலீசார் கையும் களவுமாக குணவை பிடித்தனர். அவரை, விழுப்புரம் நகராட்சி அலுவலகத்திற்கு, அழைத்து சென்று விசாரித்தனர். அலுவலகத்தில் சோதனை செய்து, சில ஆவணங்களை கைப்பற்றினர். பின், குணா மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.