ஏரிகள் உடைப்பு தத்தளிக்கும் விழுப்புரம் மாவட்டம்
கிடங்கல் ஏரி-----------திண்டிவனம் பகுதிகளில் நேற்று முன்தினம் பிற்பகலிருந்து தொடர்ந்து மழை கொட்டியது. புயல் கரையை கடந்த போது, சூரைக்காற்றுடன் கன மழை பெய்தது. விழுப்புரம் மாவட்டத்தில், திண்டிவனம் பகுதியில் மட்டும் அதிகபட்சமாக 37 செ.மீ. அளவிற்கு மழை கொட்டித்தீர்த்தது.இதனால் திண்டிவனம் பழைய பஸ் நிலையத்தையொட்டியுள்ள கிடங்கல்(1) ஏரியில் உடைப்பு ஏற்பட்டு மழை நீர் வெள்ளம் போல் கரை புரண்டோடியது. இதில் பஸ் நிலையத்தையொட்டி,கிடங்கல் பகுதிக்கு செல்லும் தரைப்பாலம் அடியோடு அடித்து செல்லப்பட்டது.பாலத்தையொட்டியுள்ள டிரான்ஸ்பார்மர் வெள்ள நீரால் கவிழ்ந்தது. வெள்ள நீர் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் கரைபுரண்டோடியதால், பஸ் நிலையத்திற்கு பஸ்கள் உள்ளே வரமுடியாத நிலை ஏற்பட்டது.கிடங்கல் ஏரியிலிருந்து அதிக அளவில் உபரி நீர் வெளியேறியதால் ஏரிப்பாசனத்தை நம்பியிருந்த விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்,.சென்னகுணம் ஏரி-------------கண்டாச்சிபுரம் தாலுகா, சென்னகுணம் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய ஏரி உள்ளது. இதன் மூலம் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.தொடர் கன மழை காரணமாக நேற்று மாலை ஏரிக்கான நீர்வரத்து கிடுகிடுவென உயர்ந்தது கரையில் மண்ணரிப்பு ஏற்பட்டு உடைந்து தண்ணீர் பெருக்கெடுத்தது.இதன் காரணமாக அருகில் உள்ள விவசாய நிலங்கள், அருகிலுள்ள வீடுகள் மற்றும் பள்ளிகளில் வௌ்ள நீர் புகுந்ததால் அப்பகுதியில் இருந்தவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டு அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பல்வேறு துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.மலையரசன் குப்பம் ஏரி :ஒன்றியத்தில் நுாற்றுக்கணக்கான ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகள் நேற்று நிரம்பி வழிந்தன. கரைகள் பலவீனமாக இருந்த மூன்று ஏரிகள் நேற்று காலை உடைந்தன. நேற்று மாலை மலையரசன் குப்பம் ஏரி உடைந்து தண்ணீர் வெளியேறியது. இதனால் நுாற்றுக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின.செஞ்சிகோட்டைக்கு பின்புறம் உள்ள மலை காடுகளில் இருந்து வெளியேறிய மழை வெள்ளம் நேற்று பி.ஏரிக்கு வந்து ஏரி கரை உடையும் நிலை ஏற்பட்டது. இதனால் உபரிநீர் வெளியேறும் பகுதியின் உயரத்தை ஜே.சி.பி., இயந்திரத்தால் உடைத்து தண்ணீரை வெளியேற்றினர். இதனால் செஞ்சியில் கடை வீதியில் வெள்ளம் ஏற்பட்டது. காவலர் குடியிருப்பிலும் தண்ணீர் புகுந்தது. மாலைக்கு பிறகு காட்டில் இருந்து வந்த வெள்ளம் அதிகரித்து செஞ்சி பஸ்நிலையம், கூட்ரோடு, திண்டிவனம் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.