உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரம் கோட்ட விவசாயிகள் கூட்டத்தில்... எச்சரிக்கை; நீர்நிலைகள் சீரமைக்காவிட்டால் வழக்கு என முழக்கம்

விழுப்புரம் கோட்ட விவசாயிகள் கூட்டத்தில்... எச்சரிக்கை; நீர்நிலைகள் சீரமைக்காவிட்டால் வழக்கு என முழக்கம்

விழுப்புரம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம், தாலுகா அலவலகத்தில் ஆர்.டி.ஓ., முருகேசன் தலைமையில் நேற்று நடந்தது. தாசில்தார்கள் டி.வி.நல்லூர் செந்தில்குமார், வானுார் வித்யாதரன், விக்கிரவாண்டி செல்வமூர்த்தி, கண்டாச்சிபுரம் முத்து, விழுப்புரம் துணை தாசில்தார் வேங்கடபதி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் முன்னிலை வகித்தனர்.விவசாய சங்க பிரதிநிதிகள் பேசியதாவது; விழுப்புரம் கோட்டத்தில் அனைத்து தாலுகாவிலும் பட்டா மாற்றம், நில அளவை பணிகளுக்கு விவசாயிகள் அலைகழிக்கப்படுகின்றனர். ஆன்லைனில் விண்ணப்பித்து, 5 முதல் 6 ஆண்டுகள் அவதிப்பட்டு வருகின்றனர். பணிகள் நடப்பதில்லை. நேரில் சென்று கேட்டால், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் கோப்பு இல்லை என்கின்றனர். பொதுப்பணித்துறையில், விவசாயிகள் அளிக்கும் கோரிக்கைகள் நிறைவேற்றுவதில்லை. அத்தியவசிய பணிகளுக்கும் நிதி இல்லை என்கின்றனர். மழைகாலத்தில் வரத்து, வாய்க்கால் உடைப்பு துார்வாரி சீரமைக்க கூட முடியாததற்கு, தனி துறை எதற்கு செயல்படுகிறது.கண்டமங்கலத்தில் பழைய கட்டடத்தை இடித்துவிட்டு, புதிய வேளாண் அலுவலகம் கட்ட வேண்டும். விக்கிரவாண்டி ஒன்றியத்தில், கலைஞர் கனவு இல்ல திட்ட வீடு ஒதுக்குவதற்கு ரூ.30 ஆயிரம் வரை லஞ்சம் கேட்கின்றனர்.விக்கிரவாண்டி ஏரியில், சாலை பணிகளுக்காக மண் எடுத்து, பாதாள பள்ளங்களாக மாற்றிவிட்டனர். ஏரியின் மறுபுறம் வீடுகள் கட்டி ஆக்கிரமித்துள்ளனர். அதனை துார்வாரி பராமரிக்க வேண்டும். கயத்துார் நெல்கொள்முதல் நிலையத்தில், எடை குறைவு பிரச்னை உள்ளது. பல நெல் கொள்முதல் நிலையங்களில் பணம் பட்டுவாடா தாமதம் ஏற்படுகிறது. எடை போடுவதற்கு ஒரு மூட்டைக்கு ரூ.60 வசூலிக்கின்றனர். தற்போது, தென்மேற்கு பருவமழை முன் கூட்டியே தொடங்கி விட்டது. கடந்த பெஞ்சல் புயல் மழையில் தென்பெண்ணை ஆற்றின் கரைகள், ஏரி, நீர் வரத்து வாய்க்கால் கரைகளும் சேதமடைந்து, தண்ணீர் தேக்கமுடியாத நிலை உள்ளது. எல்லீஸ்சத்திரம் தடுப்பணையில் பிரியும், ஆழங்கால், மரகதபுரம், கண்டம்பாக்கம் வாய்க்கால்களை தூர்வாரி சீரமைக்க வேண்டும். கடந்தாண்டைபோல், மழை நீர் வீணாக கடலில் கலக்காமல் ஏரிகளுக்கு செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும். ஏரிகளை துார்வாரி, குளங்களை சீரமைக்க ஆண்டு தோறும் வலியுறுத்தி வருகிறோம். இந்தாண்டு ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளை சீரமைக்காவிட்டால், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம். விவசாய ஊக்க நிதி திட்டத்தில் புதிய விவசாயிகளையும் சேர்க்க வேண்டும் என்றனர். அதிகாரிகள் பதில் அளித்து பேசுகையில்; நெல்கொள்முதல் நிலையத்தில், ஒரு வாரத்திற்குள் பணம் பட்டுவாடா செய்யப்படும். நில அளவை பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும். பிற குறைகள் மீதும், துறை சார்ந்த அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !