விழுப்புரம் - நாகை நான்கு வழிச்சாலை; பங்கூரில் சிறிய அறிவிப்பு பலகை; வெளியூர் வாகன ஓட்டிகள் குழப்பம்
விக்கிரவாண்டி: விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலையில், புதுச்சேரி சாலை பிரியும் பங்கூரில் பெரிய அளவிலான அறிவிப்பு பலகை இல்லாததால், வாகன ஓட்டிகள் கடும் அலைச்சலுக்கு ஆளாகின்றனர். விழுப்புரம்- நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலையில், விழுப்புரத்தில் இருந்து 29 கி.மீ., துாரத்தில் எம். என்.குப்பம் அருகே பங்கூர் கிராமத்தில், புதுச்சேரி நகரத்திற்கு செல்லும் சாலை தனியாக பிரிந்து செல்கிறது. இந்த பகுதியில் புதுச்சேரி செல்வதிற்கான சாலை என்ற அறிவிப்பு பலகை, 2x2 சிறிய அளவில் சிறிதாக அமைத்துள்ளனர். கண்ணுக்கு தெரியாத வகையில் உள்ள அறிவிப்பு பலகையால், வாகன ஓட்டிகளுக்கு சாலை பிரியும் இடம் தெரிவதில்லை. வெளி மாநிலம், வெளிமாவட்டத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் வாகன ஓட்டிகள், சாலை பிரிவது தெரியாமல், நாகப்பட்டினம் நோக்கி செல்கின்றனர். நெடுந்துாரம் சென்ற பின்பே, புதுச்சேரிக்கு செல்லாமல், நாகப்பட்டினம் நோக்கி செல்வதை உணருகின்றனர். பின்பு வில்லியனுார் உறுவையாறு அருகே சென்று புதுச்சேரிக்கு செல்லும் நிலை ஏற்படுகிறது. இதனால் தேவையில்லாத நேர விரயம், அலைச்சல் ஏற்படுவதுடன், வாகன ஓட்டிகள் கடும் குழப்பத்திற்கு ஆளாகின்றனர். தேசிய நெடுங்சாலை ஆணையம் (நகாய்) அதிகாரிகள் புதுச்சேரி சாலை பிரியும் எம்.என்.குப்பம் பகுதியில் பெரிய அளவிலான அறிவிப்பு பலகை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.