வீடூர் அணையில் நீர் வரத்து அதிகரிப்பு உபரி நீர் தொடர்ந்து வெளியேற்றம்
விக்கிரவாண்டி: வடகிழக்கு பருவ மழை காரணமாக நேற்று காலை 9:00 மணியளவில் வீடூர் அணைக்கு வினாடிக்கு 11,655 கன அடி தண்ணீர் நீர் வரத்து இருந்தது.இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணைக்கு வரும் உபரி நீரான 11,655 கன அடி உபரி நீரை திறந்து சங்கராபரணி ஆற்றில் வெளியேற்றினர். மாலை 6:00 மணி நிலவரப்படி அணையின் மொத்த கொள்ளவான 605 மில்லியன் கனஅடியில் (32அடி) 542.362 மில்லியன் கனஅடி (31.200 அடி) தண்ணீர் இருப்பு உள்ளது. இரவு 7:00 மணிக்கு அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதையடுத்து அணையிலிருந்து இரவு 8:00 மணிக்கு அபாய சங்கு ஒலி எழுப்பியும், கரையோர கிராமங்களில் தண்டோரா போட்டும் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இரவு தண்ணீர் கூடுதலாகும் போது அணையிலிருந்து கூடுதலாக உபரி நீர் வெளியேற்றப்படும் என நீர்வளத் துறை செயற்பொறியாளர் ேஷாபனா தெரிவித்துள்ளார்.