வீடூர் அணை நீர்மட்டம் உயர்வு: கலெக்டர் ஆய்வு
விக்கிரவாண்டி: தொடர் மழையால் விக்கிரவாண்டி அருகே வீடூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து, வேகமாக நிரம்பி வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், கடந்த 16ம் தேதி வடகிழக்கு பருவ மழை துவங்கி, பரவலாக பெய்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வீடூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான செஞ்சி, மேல்மலையனுார் மற்றும் சுற்றியுள்ளபகுதிகளில் தொடர் மழை பெய்வதால், சங்கராபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. நேற்று காலை 8:00 மணியளவில் அணைக்கு வினாடிக்கு, 803 கனஅடி நீர் வரத்து துவங்கியது. நேற்று மாலை 4:00 மணிக்கு அணைக்கு, 415 கனஅடியாக நீர் வரத்து குறைந்து, அணையின் மொத்த கொள்ளவான 32 அடியில் (605 மில்லியன் கன அடி) 29.450 அடி (5.371மில்லியன் கன அடி) நீர் நிரம்பியது. அணையில் 68 சதவிகிதம் நீர் பிடிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று மதியம் 12:00 மணி வரை அணையை சுற்றியுள்ள பகுதிகளில் 43 மி.மீ., மழை பெய்தது. இந்நிலையில், மதியம் 1:30 மணியளவில் கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் அணையை பார்வையிட்டார். அணைக்கு நீர் வரத்து குறித்துசெயற்பொறியாளர் அருணகிரியிடம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கினார். அப்போதுதிண்டிவனம் தாசில்தார் யுவராஜ், உதவி செயற்பொறியாளர் அய்யப்பன், உதவி பொறியாளர் பாபு உள்ளிட்டார் உடன் இருந்தனர்.